Dienstag, 24. April 2012


தமிழரின் சொத்து கல்வி என்கின்றோம். அதிலும்முதன்மைச் சொத்து கல்வியே தான் என்று அடித்துக் கூறுகின்றோம். அன்றிலிருந்தது அந்த உயர்நிலை. இன்று யாழ்ப்பாண மாவட்டத்தின் கல்வி நிலை பின்தள்ளப்பட்டு, புறக்கணிக்கப்பட்டுள்ளதன் பெறுபேறுகளைத் தேசிய ரீதியிலான பரீட்சைப் பெறுபேறுகளைக் கொண்டு கணிப்பிட முடிகின்றது. யாழ்ப்பாணக் கல்வி, யாழ்ப்பாணத் தமிழரின் கல்வி இன்று நாட்டின் பின்தள்ளப்பட்டுள்ளமையை மதிப்பீடுகளும் வெளிப்படுத்துகின்றன.இந்திய முன்னாள் ஜனாதிபதிக்கும் பாகிஸ்தான் பிரதமருக்கும் எலிசபெத் மகாராணியாருக்கும் கற்பித்த பெருமை யாழ்ப்பாணத்தவருக்கு உண்டு என்று பெருமை பேசிக்கொண்டிருந்தால் போதாது. இலங்கையில் ஏனைய சமூகத்தவர்கள் யாழ்ப்பாணத்தவரின் கல்வியின் உயர்வை, மேன்மையைக் கண்டு பொறாமை கொண்ட காலம் போய் இன்று இலங்கையின் கல்வியில் பின்னடைந்த மாவட்டங்களில் யாழ்ப்பாண மாவட்டமும் ஒன்று என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அவலம் தீவிர சிந்தனைக்குரியது. தலை நிமிர்ந்து பெருமையுடன் திகழ்ந்த யாழ்ப்பாணக் கல்வி இன்று தொய்ந்து துவண்டுவிட்டது என்பதை வேதனையுடன் ஏற்றேயாக வேண்டும்.யாழ்ப்பாணக் கல்விச் சமூகம் இன்றைய நிலையைச் சீர்செய்ய திட்டமிட வேண்டும். ஆக்கபூர்வமான செயற்பாட்டில் ஈடுபட வேண்டும். ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை, கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை ஆகியவற்றின் வருடாந்த பெறுபேறுகளை ஆய்வு செய்யும் போது படிப்படியாகக் கீழ் நோக்கியே கல்வித்தரம் நகர்ந்து வருதை அவதானிக்க முடிகின்றது.கடந்த கால சூழ்நிலைகளை மட்டும் இதற்கான ஏதுவாகக்கூறிக்கொண்டிருக்க முடியாது. யாழ்ப்பாணக் கல்வி நிர்வாக ஒழுங்கமைப்பில் பாரிய குறைபாடுகளும் இதற்கான காரணிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படக்கூடியதாயுள்ளது. அத்துடன் தேவையற்ற வெளியார் தலையீடுகளும் கல்வித்துறையின் பின்னடைவுக்கான ஒதுக்களிலொன்றாகக் காணப்படுகின்றது.யாழ்ப்பாண மாவட்டத்திலே வலிகாமம், யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி, தீவகம் என ஐந்து கல்வி வலயங்களும் அவற்றிலடங்கும் பதினைந்து கல்விக் கோட்டங்களும் மொத்தமாக நானூற்று தொண்ணூறு (490) பாடசாலைகளும் உள்ளன. கடந்த ஆண்டு இறுதி நிலையின் படி நானூற்று இருபது பாடசாலைகள் மட்டுமே இயங்குவதாயும் எழுபது பாடசாலைகள் மூடப்பட்ட நிலையிலுள்ளதாகவும் கணிப்பீடுகள் வெளிப்படுத்துகின்றன.

யாழ்ப்பாணக் கல்வி வலயத்திலுள்ள நூற்றி பதின்மூன்று பாடசாலைகளில் பதினான்கு பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் தற்போது இயங்கும் பாடசாலைகள் தொண்ணூற்றொன்பது (99) மட்டுமேயாகும். இக்கல்வி வலயத்தில் யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய் ஆகிய கல்விக் கோட்டங்கள் உள்ளன. அவற்றில் முறையே 28,40,45 என்ற எண்ணிக்கையான பாடசாலைகளடங்குகின்றன. இவற்றில் யாழ்ப்பாணக் கல்விக் கோட்டத்தில் எட்டுப் பாடசாலைகளும் கோப்பாய் கல்விக் கோட்டத்தில் ஆறுமாகப் பதின்நான்கு பாடசாலைகள் மூடப்பட்ட நிலையிலுள்ளமை வெளிப்படுகின்றது.இவ்வலயத்தில் அதிபர்கள் தரம் கொண்ட நூற்றிப் பதின்மூன்று பேர் இருக்க வேண்டிய போதும் தற்போது அத்தரத்திலிருப்போர் எண்பத்து நான்கு பேர் மட்டுமே.தெல்லிப்பளை, சண்டிலிப்பாய், சங்கானை, உடுவில் ஆகிய நான்கு கல்விக் கோட்டங்களை உள்ளடக்கிய இக்கல்வி வலயத்தில் நூற்றி ஐம்பது பாடசாலைகளிலிருந்த போதும் தற்போது இயங்கும் பாடசாலைகள் நூற்றி இருபத் தொன்பது மட்டுமே என்பது கணிப்பிடப்பட்டுள்ளது. தெல்லிப்பளைக் கல்விக் கோட்டத்தில் பதினேழு பாடசாலைகளும் உடுவில் கோட்டத்தில் மூன்றும் சண்டிலிப்பாயில் ஒன்றுமாக மொத்தம் இருபத்தொரு பாடசாலைகள் மூடப்பட்ட நிலையிலுள்ளன.

அதிபர் தரம் கொண்ட ஆளணி நூற்றி நாற்பத்தி இரண்டாக இருக்க வேண்டிய நிலையில் அத்தரத்தில் எண்பத்தொருபேரே இருப்பது தெரிய வந்துள்ளது.வலிகாமம் கல்வி வலயத்தில தெல்லிப்பளையில் இருபத்தெட்டு பாடசாலைகளும் சண்டிலிப்பாயில் நாற்பது பாடசாலைகளும் சங்கானையில் முப்பத்தொரு பாடசாலைகளும் உடுவிலில் முப்பது பாடசாலைகளுமே தற்போது இயங்குகின்றன. இக்கல்வி வலயத்தில் பருத்தித்துறை, கரவெட்டி, மருதங்கேணி ஆகிய மூன்று கல்விக் கோட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பருத்தித்துறைக் கல்விக் கோட்டத்திலுள்ள முப்பத்துமூன்று பாடசாலைகளில் இரு பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் முப்பத்தொரு பாடசாலைகளே இயங்குகின்றன. அதேபோல் கரவெட்டி கல்விக் கோட்டத்திலுள்ள முப்பத்து மூன்று பாடசாலைகளில் இரண்டு மூடப்பட்ட நிலையில் முப்பத்தொன்று மட்டுமே இயங்குகின்றன.மருதங்கேணி கல்விக் கோட்டத்தில் அடங்கும் பாடசாலைகளின் எண்ணிக்கை பத்தொன்பதாகும். அவற்றிலே இயங்குபவை பதினேழாகவும் மூடப்பட்ட நிலையிலுள்ளவை இரண்டு எனவும் அறிக்கையிடப்பட்டுள்ளன.வடமராட்சிக் கல்வி வலயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அதிபர் தர ஆளணியின் எண்ணிக்கை எண்பத்தாறாக இருந்த போதிலும் தற்போது அத்தரத்தில் ஐம்பத்திமூன்று பேரே உள்ளமை தெரியவந்துள்ளது.

தென்மராட்சிக் கல்வி வலயத்திற்குட்பட்டதாக சாவகச்சேரி கல்விக் கோட்டம் மட்டுமேயுள்ளது. இக்கல்விக் கோட்டத்தில் மொத்தமாக அறுபத்தாறு பாடசாலைகள் அடங்குகின்றன. இருந்த போதிலும் ஒன்பது பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் ஐம்பத்தேழு பாடசாலைகள் மட்டுமே இயங்குவதும் ஐம்பத்தெட்டு நிரந்தர அதிபர்களுக்கான ஒதுக்கீடு இருந்த போதிலும் முப்பத்தாறு அதிபர் தரம் கொண்டவர்கள் மட்டுமே செயற்படுகின்றனர். தீவகக் கல்வி வலயமானது வேலணை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு, காரைநகர் ஆகிய நான்கு கல்வி கோட்டங்களை உள்ளடக்கியதாக விளங்குகின்றது. இவற்றில் முறையே 34,18,10,14 என மொத்தம் எழுபத்தாறு பாடசாலைகள் அடங்கியிருந்த போதும் மொத்தமாக இருபது பாடசாலைகள் செயலிழந்த நிலையில் மூடப்பட்டுள்ளமை தெரியவருகின்றது.வேலணை கல்விக் கோட்டத்தில் பன்னிரெண்டு பாடசாலைகளும், ஊர்காவற்றுறையில் இரண்டும், நெடுந்தீவில் இரண்டும் காரை நகரில் நான்குமாக மூடப்பட்டுள்ள இருபது பாடசாலைகளுமுள்ளன.ஐம்பது நிரந்தர அதிபர்களுக்கான ஒதுக்கீடு இருக்கும் போது இருபத்தைந்து பேர் மட்டுமே அத்தரத்தைக் கொண்டவர்களாயுள்ளனர்.யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள மொத்த அரசினர் பாடசாலைகள் 490 இற்குப் புறம்பாக ஆறு தனியார் பாடசாலைகளும் செயற்படுகின்றன. குறிப்பிட்ட அரசினர் பாடசாலைகளில் ஏழு பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மத்திய கல்வியமைச்சின் நிர்வாகத்தின் கீழ் செயற்பட, ஏனையவை மாகாண கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டிற்குட்பட்டவையாக உள்ளன.

தரம் 3 எனப்படும் ஆரம்பப் பாடசாலைகளாக யாழ்.மாவட்டத்தில் இருநூற்றி முப்பத்தைந்து பாடசாலைகள் உள்ளபோதும் நூற்றி எழுபத்தைந்து பாடசாலைகள் மட்டுமே இயங்குவதும் அறுபது பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணம் வரை வகுப்புகள் கொண்ட தரம் 2 எனத் தரப்படுத்தப்பட்டுள்ள நூற்று அறுபத்தியிரண்டு பாடசாலைகளில் ஏழு பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் நூற்றி ஐம்பத்தைந்து பாடசாலைகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தர வகுப்புகளில் கலை, வர்த்தகப் பிரிவு வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்பட்ட நாற்பத்தெட்டுப் பாடசாலைகளில் நாற்பத்தேழும், அதே தர வகுப்புகளில் கலை, கணிதம், வர்த்தகம், விஞ்ஞானம் ஆகிய நான்கு துறைக்குமான பாடங்கள் கற்பிக்கப்படும் வகுப்புகளைக் கொண்டதாகச் செயற்பட அனுமதிக்கப்பட்டுள்ள நாற்பத்தைந்து பாடசாலைகளில் நாற்பத்து மூன்று பாடசாலைகளும் தற்போது இயங்கும் நிலையில் உயர்தர வகுப்புகள் கொண்ட மூன்று பாடசாலைகள் மூடப்பட்ட நிலையிலேயேயுள்ளமை கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வித் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமேயன்றி ஏனைய எந்த அழுத்தங்களுக்கும் கல்வித்துறை ஆட்படலாகாது. யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் ஆரம்பப் பயிற்சி பெற்ற முதல் மொழிக்கான ஆசிரிய தேவை நானூற்றி எண்பதாகக் கணிக்கப்பட்டுள்ள போதிலும் இவ்வலயத்தில் குறித்த தகைமை பெற்ற ஆசிரியர்கள் நூற்றி தொண்ணூறு வரையானவர்களே கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளமை வெளிப்பட்டுள்ளது. அதாவது ஆரம்ப வகுப்புகளில் கற்பிக்கும் தகைமை கொண்ட முந்நூறுக்குக்கிட்டிய ஆசிரிய வெற்றிடங்கள் இருப்பது தெரிய வருகின்றது.அதேபோல் வலிகாமக் கல்வி வலயத்தில் ஆரம்ப வகுப்புகளில் கற்பிக்கும் தகைமைகொண்ட ஆங்கில ஆசிரியர்களின் தேவை நூற்றி இருபதாக இருக்கும் போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாற்பத்தைந்தாக மட்டுமே இருப்பதும் தெரியவருகின்றது. அதேபோல் வடமராட்சி, தென்மராட்சி, தீவகம் ஆகிய வலயங்களிலும் தேவைக்குக் குறைந்த ஆங்கில ஆசிரியர்களே கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதும் வெளிப்பட்டுள்ளது. அதேவேளை, ஆரம்ப வகுப்பில் முதல்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பாரிய தேவையுள்ள போதும் யாழ்.கல்வி வலயத்தில் ஆங்கில ஆசிரியர்கள் மேலதிகமாக பணியிலீடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் ஆசிரிய வளப்பங்கீட்டின் ஒழுங்கற்ற நிலையையும் நோக்குவது தவறில்லை.ஆசிரியர்களும் கற்பிக்கும் மனநிலையில் உரிய சூழல், பணியாற்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டியது அவசியம் என்பது மறுப்பதற்கில்லை. இருந்த போதிலும் மாணவ, மாணவியரின் நலனுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். உரிய காலத்தில், உரிய கல்வியைக் குறித்த பாடத்திட்டத்திற்கமைய பாடசாலைகளில் மாணவ, மாணவியர் பெற்றுக்கொள்ள வழி செய்வது கல்வித்துறையினரின் பொறுப்பேயன்றி எப்படியாவது பாடசாலைகள் செயற்பட்டால் போதும் என்ற மன நிலையில் செயற்படக்கூடாது

அறுபது வரையான ஆரம்பப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இயங்கும் ஆரம்பப் பாடசாலைகளிலும் ஆரம்பக் கல்வியை ஆட்டங் காணச் செய்யக்கூடாது. ஆரம்பக் கல்வியில் காணப்படும், ஏற்படும் பின்னடைவு இடை நிலைக் கல்வியின் போது பிள்ளைகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், உயர் கல்வியைத் தொடர வாய்ப்பற்ற நிலையையும் ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.போக்குவரத்து போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு ஏற்ற போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுப்பதில் கவனம் செலுத்துவதுடன், அதற்கேற்ற வழிமுறைகளை ஆராய்ந்து செயற்படுத்த வேண்டும். அதைவிடுத்து இடமாற்றம் மூலம் போக்குவரத்துப் பிரச்சினையைத் தீர்க்கலாம் என்பது உகந்ததல்ல. இதை ஆசிரிய சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும். கல்வி நிர்வாகத்துறையினரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.யாழ்ப்பாண நகரிலிருந்து வேலணைக்கு ஒரு ஆசிரியர் பணிக்காகப் பயணிப்பது சிரமமானதென்றால் யாழ்.மாவட்டத்திலிருந்து தினமும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்குப் பயணம் செய்து பணிபுரியும் ஆசிரியர்களின் நிலை எவ்வாறிருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.துவண்டு, தொய்ந்து போயுள்ளது யாழ்ப்பாணத் தமிழர் கல்வி என்பதை மறுக்க முடியாது. அதுவே யதார்த்தம். உண்மை நிலை. இதை ஒவ்வொருவரும் மனதிற்கொள்ள வேண்டும். சமூக நோக்கில் சிந்திக்க வேண்டும். அன்றைய யாழ்ப்பாணக் கல்வித் தரத்தையும் இன்றைய கல்வித்தரத்தையும் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும். தொய்விற்குக் காரணத்தைக் கண்டறிந்து தமிழர் கல்வியைத் தூக்கி நிறுத்த வழிகாணவேண்டும்.அரசியல் மற்றும் அதிகாரத் தரப்பாரின் தலையீடு கல்வித்துறையில் புகாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கல்வித்துறை நாட்டின் தேசிய கல்விக் கொள்கைக்கமைய சமத்துவமாக, சுயாதீனமாக உரியவளங்களைக் கற்கும் பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுத்து தமது பணியை ஆற்ற வேண்டும்.

ஒரு பாடசாலையின் உயிர்நாடியாக முதலில் தோன்றமளிப்பவர் அப்பாடசாலையின் அதிபரே. தரமும், தகுதியும் கொண்டவர்களே ஆளுமைகொண்ட அதிபர்களாகச் செயற்படத் தக்கவர்கள். இன்றைய நிலையில் பல பாடசாலைகளில் ஆளுமையற்ற அதிபர்களின் நிர்வாகத்தில் கல்வித்தரம் தாழ்ந்துள்ளமை வெளிப்பட்டுள்ளது. மறுக்க முடியாத இந்த யதார்த்த நிலை கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.உலகப் புகழ்பெற்ற வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டமேதைகள், கணக்காளர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள் என்று பல்துறைசார் புத்திஜீவிகளை உருவாக்கிய அன்றைய யாழ்ப்பாணக் கல்வி நிலையை இன்றைய கல்வி நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்து தொய்ந்த இடத்தைக் கண்டறிந்து சீர் செய்ய வேண்டும். இது காலத்தின் தேவைமட்டுமல்ல, தமிழ்ச் சமுதாயத்தின் தேவையுமாகும்.ஒரு காலத்தில் ஆண்டு தோறும் பல்துறைகளுக்குமாகப் பல்கலைக்கழகத்திற்குத் தகைமை கொண்டவர்களாக மாணவ, மாணவியினரை உருவாக்கிய மானிப்பாய் இந்துக்கல்லூரி, மானிப்பாய் மகளிர் கல்லூரி, யாழ்.மத்திய கல்லூரில சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, அளவெட்டி அருணோதயாக் கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிலையங்களிலிருந்து இன்று எத்தனைபேர் பல்கலைக்கழக அனுமதி பெறுகின்றனர் என்பதை ஆராய வேண்டும். இந்தப் பின்னடைவின் ஏதுக்கள் கண்டறியப்பட வேண்டும்.

தமிழர் கல்வியைக் குறிப்பாக யாழ்ப்பாணக் கல்வியை மேன்மைப்படுத்த அன்று நம்முன்னோர் பாடுபட்டனர். அல்லும்பகலும் அயராது உழைத்தனர். இன்று நாம் அவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளை மட்டும் நடத்தும் நிலையில் உள்ளமை கவலைக்குரியது.யாழ்ப்பாணக் கல்வி நிலையைச் சீர்செய்ய மாணவ, மாணவியரின் கல்வித் தேவையை அதாவது அவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரிய ஆளணியை ஒழுங்குபடுத்தல் முதன்மையாகின்றது. பூரணத்துவமான அதாவது ஒரு மாணவன் தான் கற்கும் சகல பாடங்களுக்கும் உரிய கற்பிக்கும் தகைமை கொண்ட ஆசிரியர்களைப் பெற்றுக்கொள்ளும் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் ஏனைய பௌதீக வளங்களும் உரிய படி கிடைக்கச் செய்ய வேண்டும். காலத்தின் தேவையறிந்து காலம் தாழ்த்தாது செய்யப்பட வேண்டியது இது.கல்வியே சமூகத்தின் உயிர்நாடி. சமூகத்தின் உயர்வுக்கு ஆதாரம் கல்வி என்று மேடைப் பேச்சிலும் அறிக்கைகளிலும் மட்டுப்படாது யாழ்ப்பாணத் தமிழர் கல்வியை பண்டைய நிலைக்கு முன்னிலைப்படுத்த ஆசிரிய சமூகமும் பல்கலைக்கழக சமூகமும் பெற்றோரும் கல்விமான்களும் புத்திஜீவிகளும் சமூக அமைப்புகளும் இணைந்து முன்வந்து செயற்பட வேண்டும்.காலத்தில் வழங்கப்பட வேண்டிய கல்வியை, அதன் பெறுமதியை உணர்ந்து செயற்படுவது இறை பணியாகும். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பது போல் கல்விச் சேவையே சமூக சேவை, தேவை என்பதை நினைவிலிருத்தி நமது பிள்ளைகளின் வளமான வாழ்விற்கு வழிதிறப்போம்.


ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டம் நடந்து முடிந்ததன் பின்னர் அரசாங்கத்திற்குள் குழப்பநிலை காணப்படுவதாக தென்படுகிறது. அரசாங்கத்தின் முன்னணியின் தலைவர்கள் சிலர் ஜெனீவா சென்ற குழுவில் அங்கம் வகித்தவர்கள்.இருந்த போதிலும், அவர்கள் தொடர்பில் அரசாங்கத்திலுள்ள உள்வாரியாக முரண்பாடு நிலவுவதாக ஊடக அறிக்கைகள் வெளிவந்துள்ளன. ஜெனீவாவில் நடைபெற்ற வாக்கெடுப்பின் பின்னர் அரசாங்கம் தனது அரசியல் செல்வாக்கில் நாட்டில் பாதிப்பு ஏற்பட்டு விடாதும் அதன் குறைந்த பட்சமாக்கி பாதுகாத்துக் கொள்வதற்காக அதில் தான் (வாக்கெடுப்பில்) வெற்றி பெற்றதாக காட்டிக் கொள்ள விரும்பியது. ஆனால் அரசாங்கம் ஜெனீவாவில் நடைபெற்ற 13 ஆவது கூட்டத் தொடரில் 39 நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்தமையுடன் ஒப்பிடுகையில் இப்போது 19 ஆவது கூட்டத் தொடரில் 15 வாக்குகளையே பெற்று அதன் சர்வதேச ஆதரவால் பெரும் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதன் காரணமாக அது தொடர்பில் அரசாங்கத்தினால் விவாதிக்க முடியாத நிலை காணப்படுகிறது.ஜெனீவாவில் இவ்வாறு சர்வதேச ஆதரவில் ஏற்பட்டுள்ள வேறுபாடு தொடர்பில் அரசாங்கத்திற்குள்ளேயே கூட ஒருமித்த கருத்து காணப்படுவதாக தெரியவில்லை. ஜெனீவா சென்ற கையாளவே கடினமாகக் கருதப்பட்ட அரசாங்கத்தின் பேராளர் குழுவின் மத்தியிலும் பிரிவினை காணப்பட்டதாகத் தெரிகிறது. பெரிய அளவினதான அந்தப் பேராளர் குழுவில் அரசியல்வாதிகள், ராஜதந்திரிகள், பத்திரிகைத்துறையினர், சிவில் சமூக ஆர்வலர்கள் உள்ளடங்குவர். இவர்கள் அரசாங்கத்திற்கு சார்பாக ஆதரவு திரட்டச் சென்றிருந்தார்கள். ஒரு சிலர் தம்முடன் வந்த அங்கத்தவர்களால் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு திறம்படச் செயற்படாததாக குறைகூறப்பட்டனர்.அத்துடன் பொருத்தமற்ற வகையில் பேசி இலங்கை பெறக் கூடிய ஆதரவினை இழக்கச் செய்ததாகவும் குறை கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் வாக்கு தொடர்பாக அதனை இழந்து விடுவதற்கு இந்தியா இலங்கையை ஆதரிக்கும் என்பது தொடர்பாக அளவுக்கு மீறிய ஆர்வத்துடன் வெளியிட்ட அறிக்கைகளும் அதனை இழந்தமைக்கு காரணம் எனப்படுகிறது. இந்தியாவின் உள்நாட்டு நிலைமைகளை அவர்கள் அறியாதோ அல்லது உதாசீனம் செய்தோ இவ்வாறான தவறுகளை இழைத்திருக்கலாம்.ஜெனீவா வாக்கெடுப்புத் தொடர்பாக பல காரியங்களை வித்தியாசமாகவும் திறம்படவும் செய்திருக்க முடியும். ஆனாலும் கூட அரசாங்கம் ஜெனீவா வாக்கெடுப்பில் வெற்றி பெறத் தவறியமைக்கு தனியே அங்கு சென்ற பேராளர் குழு இழைத்த தவறுகள் மாத்திரமே காரணம் எனக் கூறிவிடவும் முடியாது. அரசாங்கப் பேராளர்களில் சிலர் எடுத்துக் காட்டத்தகுந்த உரைகளை ஆற்றியுள்ளனர். பல கண்டங்களைச் சார்ந்த நாட்டினரையும் இலங்கைக்கு ஆதரவளிக்க கவரும் வகையில் தனிப்பட்டவகையில் பிரசாரம் செய்துள்ளனர். 

ஆனால் உலகின் இனியில்லை எனக் கூறக்கூடிய சட்டவல்லுநர்களாலும் சில வழக்குகளை வெல்ல முடியாது போவதுண்டு. வழக்கினை வெல்வதென்பதற்கான வாய்ப்பு அதன் உள்ளடக்கங்களில் தங்கியுள்ளது. வழக்கின் காரணம் (உள்ளடக்கம்) பலவீனமாயிருக்கையில் மிகச்சிறந்த சட்ட வல்லுநர்களாலும் கூட பலவீனமான வழக்கை வலிமையானதாக மாற்ற முடியாது போய்விடுகிறது. ஜெனீவாவில் இலங்கையின் பேராளர்குழு எதிர்நோக்கியமையும் இவ்வாறான குறைபாடு சார்ந்தது என்றே நம்பவேண்டியுள்ளது. குறைபாடுடைய ஒரு நிலைவரத்தினை அல்லது வழக்கை ஆதரிக்க சென்ற அக்குழு தோல்வியடைந்து விட்டது.ஜெனீவாவில் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்ட சவாலை இலங்கை அரசாங்கத்தால் வெற்றி கொள்ள முடியாது போனமை தொடர்பாக ஏற்பட்ட விமர்சன ரீதியான மதிப்பீடுகளுக்கு காரணமாக அமைந்தது 2009 ஆம் ஆண்டில் இலங்கையின் பேராளர் குழு வெற்றிகரமாக தனது நிலைப்பாட்டை நிலைநிறுத்திக் கொண்ட நினைவுகள்தான் எனப் படுகிறது. எவ்வாறாயினும் இலங்கை 2009 ஆம் ஆண்டில் ஜெனீவாவில் எதிர்நோக்கியவையும் பின்னர் 2012 ஆம் ஆண்டில் எதிர்நோக்க வேண்டியதாக இருந்தனவும் கணிசமான அளவுக்கு வெவ்வேறானவையாகும். 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் ஒரு முடிவுக்கு வந்த போது இலங்கையின் எதிர்காலம் பற்றி நல்லதே நடக்கப்போகிறது என்ற நம்பிக்கை நிலவியது. யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியமையும், மனித உரிமைகள் மீறப்பட்டமையும் பற்றி சர்வதேச சமூகம் அறிந்திருந்த போதிலும் அவர்கள் கடந்த காலத்தை விட எதிர்காலம் பற்றியே கூடிய அக்கறையும் கரிசனமும் காட்டியிருந்தனர். அதனால் தான் பல அரசாங்கங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக அப்போது (2009) வாக்களித்திருந்தன. சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்த உறுதி மொழிகளை அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தனர். அதாவது இலங்கை அரசாங்கம் முரண்பாடுகளுக்கு ஆணிவேரான பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையிலான நியாயமான அரசியல் தீர்வொன்றினை வழங்கப் போவதாக கூறிய உறுதி மொழிகளை ஏற்றுக் கொண்டிருந்தனர்.

மனித உரிமைகள் பேரவையின் 2012 ஆம் ஆண்டு கூட்டத்தில் சர்வதேச நாடுகள் இலங்கை அரசாங்கம் முன்னர் 2009 இல் கூறிய உறுதி மொழிகளைப்பற்றி நீண்ட கலந்துரையாடலைச் செய்தன. கலந்துரையாடலின் இறுதியில் இப்போது இலங்கை அரசாங்கம் காட்டவேண்டியது, அது 2009 ஆம் ஆண்டு கூறிய உறுதி மொழிகளல்ல என்றும், அவ்வுறுதி மொழிகளின் அமுலாக்கம் பற்றியே என்றும் உறுதியாகக் கூறின. அரசாங்கத்தினால் அவ்வாறான அரசியல் தீர்வு ஒன்றைப் பற்றியோ அல்லது அது தொடர்பாக செய்த எதுவித முன்னேற்றம் பற்றியோ கூற முடியாது போயிற்று. அதனை விடுத்து எத்தனைபேர் மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர், எத்தனை கிலோ மீற்றர் வீதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப்புலியினர் எத்தனைபேர் புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளனர் என்பன போன்ற விபரங்களையே அரச தரப்பினரால் பேச முடிந்தது. அவர்கள் பொருளாதார வளர்ச்சி வீதம், மின்சாரம் வழங்கப்பட்ட வீடுகளின் அதிகரித்த அளவு, குழாய் நீர் வழங்கப்பட்டுள்ள அளவுகள் என்பன பற்றியும் அவர்கள் குறிப்பிட்டார்கள். கூடியளவிலான வகையில் இந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

அதே போன்று அளவு ரீதியாக பார்க்கையில் சட்டத்திற்கு புறம்பான வகையில் கொலைகளும், ஆட்கடத்தல்களும் ஏற்பட்டுள்ளன. யுத்த காலத்தின் போது இவ்வாறான சம்பவங்கள் 10 முதல் 20 வரையில் ஒவ்வொரு நாளிலும் ஏற்பட்டும் உள்ளன. இவை இப்போது குறைவடைந்து ஒரு மாதத்தில் இவ்வாறான சம்பவங்கள் 10 20 வரை ஏற்படுவதாக காணப்படுகின்றன. யுத்த காலத்தில் இடம்பெற்ற இவ்வாறான சம்பவங்களை முற்றாக ஒழிக்காது இப்போதும் கூட ஆட்கள் கடத்தப்படுதல் , நிரந்தரமாக ஆட்கள் காணாமல் போவது போன்ற சம்பவங்கள் இடம் பெறுவதால் அரசாங்கம் இவற்றைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ளதாகவே தெளிவாகத் தெரிகிறது. அரசாங்கம் தனது பொறுப்பில் தவறியுள்ளமைக்கு இவை நம்பக்கூடியதான ஆதாரமுமாகும். முன்னணி சோஷலிச கட்சியின் தலைவர்கள் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் அவுஸ்திரேலியப் பிரஜை. அவுஸ்திரேலிய அரசாங்கம் கொடுத்த கடுமையான அழுத்தங்கள் காரணமாக அவர் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறான சம்பவங்களால் இலங்கை அரசாங்கம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் உயர் கொள்கைகளுக்கு சார்பாக அது நடந்து கொண்டதாக கூற முடியாதுள்ளது.

மூன்று வருடங்களுக்கு முன்னர் ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக செய்யப்பட்ட வாக்கெடுப்பின் போது இலங்கையில் போர் முடிந்து அப்போது மூன்று மாதங்கள் மட்டுமே முடிந்திருந்தன. யுத்தத்தில் ஏற்பட்ட கொடுமைகள் பற்றி சர்வதேச சமூகத்தின் மனதில் நினைவுகள் பசுமையாக இருந்தன. ஆனாலும் பெரும்பான்மையான அரசாங்கங்கள் இலங்கை அரசாங்கத்தினை ஆதரிக்க தீர்மானித்திருந்தன. ஆனால் மார்ச் 2012 ஆம் ஆண்டில் யுத்தம் பாரிய நினைவுகள் மிகவும் பழையதாகிப் போன நிலையில் இலங்கை வாக்கெடுப்பில் தோற்றுப் போனது. முன்னர் அரசாங்கத்தை ஆதரித்த நாடுகள் இப்போது தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளன. எனவே யுத்தத்தின் இறுதிக் காலத்தில் ஏற்பட்டவை வாக்குகள் வழங்கப்பட்டமையினை தீர்மானித்த காரணிகள் அல்ல என்பது இப்போது தெளிவாகின்றன.

சர்வதேச நிலைவரத்தில் ஏற்பட்ட சடுதியான மோசமான நிலைமை அரசாங்கத்திற்கும் அதன் அங்கத்தவர்களுக்கும் மாத்திரமன்றி முழு நாட்டிற்குமே கவலையும் வியப்பும் தரும் மாற்றங்களாக தென்படுகின்றன. சர்வதேச சதித்திட்டம் பற்றிய அக்கறையும் அச்சமும் ஏற்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் சீனாவுடனான நெருக்கமான உறவு இவ்வாறான சர்வதேச பிரச்சினைக்கான அடித்தளம் என்ற அனுமானமும் உண்டு. இதற்கு ஐக்கிய அமெரிக்காவினதும் இந்தியாவினதும் ஆர்வங்களே இலங்கையை சீனாவுடனிருந்து அகலச் செல்வதற்காக காரணங்கள என்றும் கூறப்படுகிறது.இவற்றை மனதிற்கொண்டே இலங்கை மீது யுத்தக்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் காரணமாகக் காட்டி நிர்ப்பந்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறிக் கொள்கின்றனர். கொடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலைமைகளில் பெரும்பாலான நாடுகளில் ஏற்பட்டுள்ள சம்பவங்களைப் பற்றி விசாரிக்க முனைந்தால் அந்நாடுகள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவனவாகவே காணப்படும்.

இவ்வாறான தற்போதைய நெருக்கடிகள் ஏற்படுகின்ற நிலைமைகளில் அரசாங்கம் பல பரிமாணங்களிலும் கூர்மையாக செயற்பட வேண்டும். ஐ.நா.சபையின் ஒரு அங்கமான பேரவையில் இலங்கைக்கு எதிரான எதிர்மறையான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சர்வதேச சமூகம் ஆர்வம் காட்டுகின்ற அனைத்துக் கோணங்களிலும் அரசாங்கம் திருப்தியாக ஆவனவற்றை செய்து காட்ட வேண்டும். இல்லாவிட்டால் அத்தீர்மானம் உலகின் நிகழ்ச்சி நிரல்களில் தொடர்ந்தும் இருந்து எம்மை நெருக்கிக் கொண்டே இருக்கும். இலங்கையின் விவகாரங்களில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவையே கூடிய அக்கறை காட்டுவதாக உள்ளது. எனவே இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் தொடர்பாக ஆவன செய்ய முனைப்பாக செயற்பட வேண்டும். அதற்காக சிறுபான்மை இனத்தவர்களுக்கு அரசியல் மற்றும் ஜனநாயக உரிமைகள் வழங்கப்படுவது உள்ளடங்கலாக அனைத்து மனித உரிமைகளும் உத்தரவாதப்படுத்தப்படுதல் அவசியம். இவற்றுடன் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை உலக வல்லரசுகளிடையே ஒரு சமாதானமான முறையில் பேணப்படுவதும் முக்கியமாகும். இவ்வாறானவற்றை இலங்கை திருப்திகரமாக கையாளுமேயானால் இலங்கையின் பேராளர் குழு 2009 ஆம் ஆண்டில் ஜெனீவாவில் அடைந்த வெற்றியை மீண்டும் அடைய முடியும் என்பதற்கான காரணங்கள் ஏற்பட்டுள்ளதாக நம்பமுடியும்.

Sonntag, 15. April 2012



புத்திசாலித்தனமான செயலைச் செய்வதற்கும் ஒரு காலமுண்டு. சண்டையிடுவதற்கும் ஒரு காலமுண்டு. இலங்கை ஜெனீவாவில் எத்துணையளவுக்கு சண்டையிட்டது என்பதில் சந்தேகமில்லை. அப்போராட்டம் தொடர்பில் தற்போதும் கூட நன்றாக ஆராயப்படுகிறது. விமர்சிக்கப்படுகிறது. மதிப்பீடு செய்யப்படுகிறது. இலங்கையின் ராஜதந்திரத்தில் பன்மடங்கு கற்றுக் கொள்வதற்கு அதிக பாடங்கள் உள்ளன. அவை எதற்கும் சர்வதேச கட்டமைப்பில் குறுகிய அரசியல் கரும மாற்றுவதில்லை. ஆனால் சண்டையிடுவதற்கான காலம் நிறைவுற்றுவிட்டது. சமகாலமானது நேர் முன்தோன்றும் புத்திசாலித்தனமான செயலைச் செய்து நகர்வதற்கேதுவானதாகும். 


எந்தளவுக்கு அருசியானதாக இருந்தாலும் பரவாயில்லை. இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழு தீர்மானத்தின் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பது இலங்கையை ஜெனீவாவுக்கு இழுத்துச் சென்று பலமான அடிவாங்குவதற்கு வழிகாண்பித்த அந்தகாரமான அதே நிலைமைக்கு மீண்டும் நாட்டை அழைத்துச் செல்லும் ஒரு வீண்முயற்சியாகும். சிந்திய கொட்டிய பாலுக்காக அழுவதில் அர்த்தமில்லை. கிட்டாப் பொருளுக்கு ஏங்குவது போன்று சப்த மிடுவதில் எதுவும் கிட்டப் போவதில்லை. சமூகங்களுக்கிடையில் 30 வருடகால யுத்தக் காயங்களை குணப்படுத்தி புரிந்துணர்வுப் பாலத்தை கட்டி எழுப்பும் வகையில் மீளப் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பைத் தோற்றுவிக்கும் நோக்கில் ஏற்பட்ட வாய்ப்பாகவே அநேகமாக அமைந்திருக்கலாம் என்றே ஜெனீவா தீர்மானம் கருதப்பட வேண்டும். இதற்குப் பதிலாக தீர்மானத்தை நிராகரித்து மேற்குலக சதியை எண்ணி அதைரியப்பட்டு மக்களைத் தூண்டும் அறிக்கைகளை விடுவதில் எதுவித அர்த்தமும் இராது. 

யுத்தம் மூன்றாண்டுகளுக்கு முன்பு முற்றுப் பெற்று விட்டது. வன்முறையின்றிய எதிர்காலத்தை உறுதி செய்யும் ஸ்திரமான அமைதியை அடைய தேசம் காத்துக் கொண்டிருக்கிறது. அதனைச் செய்வதற்கு யுத்தத்துக்கு இட்டுச் சென்ற வேறுபாடுகளைக் களைதல், கடந்த காலத்தவறுகள் மீள் தோன்றா வண்ணம் அமையக் கூடிய நடவடிக்கைகள் சகலருக்கும் சமத்துவம்/ நீதியை நிச்சயப்படுத்துதல்/ முன்னோக்கி நகரக் கூடிய வகையில் துணை புரியக் கூடிய பொறிமுறைகளை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களில் / இலங்கை நல்லிணக்கம் காண வேண்டும்./ தேசிய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் முன்னேற்றுவதற்காக முரண்பாடுகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து உள்ளூரிலேயே பணிக்கப்படக் கூடிய பரிந்துரைகளுடன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆய்வுக் குழுவான நல்லிணக்க ஆணைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை எதிர்பார்க்கப்படும் பொறி முறையையும் உறுதிப்பாட்டையும் வழங்குகின்றமை தெரிந்ததே. 

ஒரு இறைமையுள்ள நாடு எவ்வாறு தனது அலுவல்களை நகர்த்த வேண்டும் அல்லது செய்ய வேண்டும் என கூறுவதற்கு வெளிநாட்டுச் சக்திகளுக்கு உரிமையில்லை என்ற ஒரே காரணத்துக்கு ஒரு ஆணைக் குழுவின் பரிந்துரைகள் அதுவும் குறிப்பாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக் குழுவின் சிபாரிசுகளை அமுலாக்கம் செய்யுமாறு கோரும் ஜெனீவா தீர்மானத்தை நிராகரிப்பது முகத்தை துன்புறுத்துவதற்காக மூக்கை வெட்டுவதற்கு நிகரானதாகும். அதாவது மற்றொருவனும் தீங்கடைந்து கொள்ள வேண்டும் என தன்பொருட்டு தனக்கே தீங்கிழைத்துக் கொள்வதற்கு ஒப்பானது. மேலும் அரசாங்கமும் குறித்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டதில் இருந்து சம்பந்தப்பட்ட பரிந்துரைகளை அமுல்படுத்தும் என்று கூறியே பல அறிக்கைகளை வெளியிட்டு வந்தது. 

மாயை போன்று காட்சி தரும் சமாதானம் வெற்றி அளிப்பதற்கு மேலெழு பெருமையடிப்பும் பிடிவாதமான போக்கும் பாதியளவாவது நாட்டை முன்னகர்த்திச் செல்வதற்கு போதுமானதல்ல என நோக்கர்கள் கூறுகின்றனர். இலங்கை யுத்த வெற்றியின் மகிழ்ச்சியை உண்மையில் அனுபவிக்க வேண்டும். ஆனால் சண்டையிடும் குணம் தேசிய பெருமையை புண்படுத்தல், அவர்களுக்கு என்ன துணிச்சல் போன்ற மனோபாவத்துக்கப்பால் நகர வேண்டிய தேவையுள்ளது. நேர்மையான சுய நம்பிக்கை மற்றும் தோற்கடிக்கப்பட முடியாது எனக் கருதப்பட்ட யுத்தத்தை நினைத்துப் பார்க்க முடியாத வகையிலும் தோற்கடித்த வகையிலும் எங்கு எப்போது கொடூரமான பிழை ஒவ்வொன்றும் நடந்துள்ளது என்ற சுய பரிசீலனை போன்றனவே சிறந்த ஆரம்பத்துக்கு எதுவாக அமையலாம். 

எத்தகைய சூழ்நிலையிலும் உயர்விலை மதிப்பீடு செய்வதற்கு நேர்மை என்பது ஒரு சரக்கல்ல. மடத்தனத்தைக் கூட மன்னிப்பாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒருவேளை மீண்டும் நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கையை உற்சாகமான முறையில் வெளிக் கொணர்ந்து உண்மையிலேயே அது என்ன கூறுகிறது என்பது தொடர்பில் பொது மக்களுக்கு அறிவிப்பதே சமயோசிதமானதாக அமையலாம். ஏனெனில் இலங்கையில் மேற்குலக தலையீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களில் பெருத்த எண்ணிக்கையிலானோருக்கு நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கை தொடர்பாக எதுவுமே தெரியாது என்பதே ஒரு வருந்தத்தக்க விடயமாகும். அரசாங்கத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் என்பது மாத்திரம் தெரிந்து கொண்டு எதனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம் என்பது தெரியாதவர்கள் உள்ளனர். சிலவேளை சர்வதேச சக்திகளுக்கு எதிராக குறிப்பாக அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பரிக்கிறோம் என்பது தெரிந்தாலும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் அறியாத பல மக்கள் இல்லாமலில்லை.

நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் உண்மையாக எத்தனை பல்வேறு வகையான விடயங்களையும் உள்ளடக்கியதான சிபாரிசுகள் காணப்படுகின்றன என்பது மக்களுக்குத் தெரியவில்லை. யத்த காலத்தில் புரியப்பட்டதான வன்செயல்கள் தொடர்பிலான மேலும் விசாரணைகளுக்கான தேவை, தகவலறியும் உரிமைச் சட்டவாக்க அறிமுகம், இடம்பெயர்ந்தோருக்கான உதவி, இராணுவ மயமற்றதாக்குதல் மற்றும் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களைதல், அரசியல் தீர்வுக்கான தேவை போன்ற பல பரிந்துரைகள் உள்ளன என்பதை மக்கள் அறிவரோ ! ஜெனீவா தீர்மானம் சில வேளை உண்மையான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய வேலையையும் குறிக்கோளை செயற்பாடாக மாற்றும் நாட்டுக்குத் தேவையான உந்து சக்தியாகவும் அமைந்து விடலாம் என்கின்றனர் நாட்டு நலன் செல்ல வேண்டிய முன்னால் இருக்கும் பாதையை நோக்குவதும் நகர்வதும் தற்போதையதேவை. மாறாக திரும்பி பார்ப்பதும் செய்ய முடியுமானதைச் செய்ய கடுமையாக யோசிப்பதும் நாட்டை நகர விடாமல் தடுத்து வெளியேறி கரைசேர்ந்த சேறு சகதிக்குள்ளேயே மீண்டும் அழைத்துச் செல்லும் எனில் மிகையாகாது. 

பாராளுமன்றத்தில் நிலைமைகள் இவ்வாறிருக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துக என்ற கோரிக்கை ஜெனீவா தீர்மான மூடாக வெளி வந்துள்ள வேளை நம்மவர்களோ நமது வழக்கமான பாணியை கடைப்பிடித்து ஜெனீவா தீர்மானத்துக்கும் மேலான தீர்மானங்களை முன்மொழிந்த வண்ணம் உ ள்ளனர். தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரு வாரங்களாகிக் கொண்டிருக்கின்ற தருணத்தே பாராளுமன்றத்திலும் விவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சுருக்கக் கூறின் முகாமைப்படுத்தப்படாத வெளிநாட்டுக் கொள்கை தொடர்பாகவும் தீர்மானத்தின் மூலமான எதிர்கால விளைவுகளையும் மனித உரிமை மீறல்களையும் அரசாங்கத் தூதுக் குழுவின் பலயீனங்களையும் எதிரணியினர் மன்றில் கொட்டித் தீர்ப்பர்.

ஆனால் அரச தரப்போ சிறந்த வெளிநாட்டுக் கொள்கை, ஐ.தே.க. காலத்துக்கு மனித உ ரிமை மீறல்கள் , தீர்மானம் தொடர்பான வாய்ச் சவடால்கள் எத்தகைய சூழ்நிலையிலும் அடிபணியோம், எத்தகைய அழுத்தத்துக்கும் முகங் கொடுக்கத் தயார் என்ற தோரணையில் வீர வசனங்களை பேசித் தள்ளுவர். யோசிக்காமல் பேசுவதும் பேசி விட்டு யோசிப்பதும் ஜனநாயகத்தில் ஒரு வகை அத்துப்படி. அதற்கு இலங்கையின் ஆர்ப்பாட்டம் மேடைகள், பாராளுமன்றம், தேசப்பற்று போன்றன விதிவிலக்காக அமைவதில்லை. எது எவ்வாறாயினும் தமது நாட்டிலுள்ள பல்வேறு பிரிவினரிடம் இருந்து பல்வேறுபட்ட அபிப்பிராயங்கள் விமர்சனக் குறிப்புகளை ஜெனீவா தீர்மானம் இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. இதேவேளை நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் பற்றி முன்னணி அரசியல் வாதிகள் உட்பட அரசாங்க அமைச்சர்கள், ஆளும் கூட்டமைப்பு முக்கியஸ்தர்களிடம் இருந்து முரண்பாடான கருத்துகள் வெளிவந்து உள்ளன. 

மக்களோ நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பிலான அரசாங்கத்தின் அடுத்த நகர்வை அறிந்து கொள்வதில் ஆவலாக உள்ளனர். ஆனால் உறுதியான கருத்துகள் வர வேண்டிய உயர் மட்டத்தில் இருந்து ஒன்றுக் கொன்று முரண்பாடான சமிக்ஞைகள் சந்திக்கு வருவதால் சங்கடப்பட்டுக் கொள்கின்றனர்.ஜெனீவா தூதுக் குழுத் தலைவர் அமைச்சர் மஹிந்த சமர சிங்க பரிந்துரைகளை அமுலாக்க இலங்கை அரசாங்கம் பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டதாகவும் முழுமையாக அமுலாக்கம் நடைபெறும் என்றும் கூறினார். எவ்வாறாயினும் தூதுக்குழுவில் இடம்பெற்ற அமைச்சர் நிமால் சிறி பால டி சில்வா ஆணைக் குழு அறிக்கை தம்ம பதம் அல்லது புனிதபைபிள் போன்ற புனித ஆவணம் அன்று. அவசியமானதை பரிந்துரைகளை மாத்திரம் அரசாங்கம் அமுலாக்குமே ஒழிய ஆணைக் குழுவின் அனைத்து சிபாரிசுகளையும் அமுலாக்க வேண்டிய கடமைப் பாடில்லை என்றார். இலங்கையை சட்ட முறையாக ஜெனீவா தீர்மானம் கட்டுப்படுத்தாது என்ற வகையில் கவலை இல்லை என்று அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். அதேவேளை பதில் ஊடக அமைச்சர் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அமுலாக்கம் சம்பந்தமாக இதுவரையில் அரசாங்கம் தீர்மானம் எடுக்கவில்லை என்றார். இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டுக்கான தூதுவர் கருத்துரைக்கையில் ; இலங்கை அரசாங்க ஜெனீவா தீர்மானத்தை இலேசானதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் எதிர்காலத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி நாடுகள் நகர்த்துகை செய்யுமாதலால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கையும் செய்தார். 


நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமைகளைப் பொறுத்த வரை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் திக்கற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதையே அரசாங்க உயர் பீடத்தினரின் சொல்லும் செயலும் நன்கு புலனாக்கி வருகின்றன.அதாவது ஜனாதிபதி ராஜபக்ஷ பயங்கரவாதம் எனப்படுவதைத் தோற்கடித்த வெற்றிக்களிப்பு தீர்ந்து விடக்கூடாதென்பதற்காக உயர்ந்த வண்ணமுள்ள வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் பரந்துபட்ட மக்களைத் திசை திருப்புவதற்காக நான் பயங்கரவாதத்தை மீண்டும் தலைதூக்க விடமாட்டேன். நான் அதனை அழித்துவிட்டேன். சில நாடுகள் எம்மீது அழுத்தம் கொடுப்பதற்கு முனைந்து வருகின்றனவாயினும் எமக்கு முழுமையான சர்வதேச ஆதரவுண்டு என்று அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றதாகிய ஸ்ரீலங்கா எக்ஸ்போ 2012 என்ற வர்த்தக கண்காட்சி திறப்புவிழா வைபவத்தின் போது ஜனாதிபதி ராஜபக்ஷ சூழுரைத்தார். படுகேவலமான 30 ஆண்டு கால பயங்கரவாதத்தைத் தோற்கடித்து உலகில் எந்தவொரு நாடும் புரியாத சாதனையைச் செய்துவிட்டோம் என்று ராஜபக்ஷ மேலும் கூறி வைத்தார்.


அதேநேரத்தில் மீனவர்கள் என்ற போர்வையில் 150 விடுதலைப்புலி உறுப்பினர்கள் தமிழ் நாட்டு முகாம்களில் பயிற்சி பெற்றுவிட்டு வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு வந்து சேர்ந்துள்ளதாகவும் அவர்கள் குழப்ப நிலைமையை ஏற்படுத்துவதற்கு தயாரகியுள்ளதாகவும் இலங்கை புலனாய்வு துறையினர் கண்டு பிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இதனை இலங்கையிலுள்ள இந்திய தூதரம் மறுத்துள்ள அதேவேளை சென்னையில் வெளியாகும் இந்து பத்திரிகை மீண்டும் இலங்கை புலிப்பூச்சாண்டியைக் கீழப்புகிறதா என்று எள்ளி நகையாடும் விதத்தில் கேள்வி எழுப்பியுள்ளது. ஈ.பி.டீ.பி உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 3 புலி உறுப்பினர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இலங்கை புலனாய்வுத் துறையினர் தமது கண்டுபிடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஒப்புதல் வாக்கு மூலமானது எவ்வாறு பெற்றுக் கொள்ளப்படுகிறது. என்ன மொழியில் பதியப்படுகிறது என்பதெல்லாம் பகிரங்க இரகசியமாகும். எனவே அரச தரப்பினர் தமது கையாளாகாத்தனத்தை பூச்சாண்டிகள் கொண்டு மூடிமறைத்து விடலாமென்று எண்ணுவதை விடுத்து துணிச்சலாக பயனுறுதியான செயற்பாடுகளில் இறங்க வேண்டும். அதாவது பிரதானமாக நீண்டகால தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயபூர்வமான அதிகாரப் பகிர்வுடன்கூடிய அரசியல் தீர்வு காண்பதற்குத் தலைப்பட வேண்டும். அதனை விடுத்து சர்வதேச சதி என்ற போர்வையின் கீழ் ஆவேசமடைந்து தான்தோன்றித்தனமாக கருத்துகள் வெளிப்படுத்தி வருவது நாட்டுக்குப் பெரும் தீமை விளைவிக்குமேயொழிய ஒரு துளி நன்மையையும் கொண்டு வரப்போவதில்லை.

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 19 ஆவது அமர்வுகள் 27.02.2012 ஆம் திகதி ஆரம்பமாகிய போது இலங்கைக்கு "எதிரான' பிரேரணை அமெரிக்கா தலைமையில் கொண்டுவரப்படவிருந்ததை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை முன்னின்று நடத்துமாறு ஜனாதிபதி ராஜபக்ஷ அமைச்சர்கள் பாட்டலி சம்பிக்க ரவணக்க மற்றும் விமல் வீரவன்ச இருவரையும் அலரிமாளிகைக்கு அழைத்து அறிவுறுத்திநாரல்லவா? அதனைத் தொடர்ந்து அரசாங்க தரப்பினர் உலகின் பல பாகங்களுக்கு ஆலாய்ப்பறந்து பகீரதப்பிரயத்தனம் செய்திருந்த போதும் 22.03.2012 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நடத்தப்பட்ட வாக்கொடுப்பில் இலங்கைக்கு தோல்வி கிட்டியதை அரசாங்கத்தினால் கிஞ்சித்தும் சகித்துக் கொள்ள முடியாமலுள்ளது கண்கூடு.தற்போது குறித்த ஜெனீவா தீர்மானத்துக்கெதிராக நேரடியாகவே ஜனாதிபதி ராஜபக்ஷவின் தலைமையில் மக்களின் ஆதரவை திரட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படுவதாக அறியக்கிடக்கிறது. உண்மையில் 31.03.2012 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் கண்டியில் நடத்தப்பட்ட கூட்டத்தில் உத்தேசிக்கப்பட்ட தொடர் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. மற்றும் 02.04.2012 ஆம் திகதி அலரிமாளிகையில் அரச அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடல்களின் போது ஜெனீவா, நியூயோர்க், வாஷிங்டன் ஆகிய இடங்களில் உள்ள சக்திகளின் அழுத்தங்களை இலங்கை அரசினால் எதிர்கொள்ள முடியுமென்று ஜனாதிபதி கூறிவைத்தார்.

மற்றும் ஒரு விநோதம் என்னவென்றால் நல்லாட்சி என்பதற்கு அரசியல் வழிவாயத்தால் அவசியமென்பதைப் புறந்தள்ளும் வகையில் ஜனாதிபதி ராஜபக்ஷ கருத்து வெளிப்படுத்தியதாகும். அதாவது நாட்டின் பிரதிமையை மேம்படுத்துவதற்கு அவசியமான நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்கு அரச அதிகாரிகள்தான் உழைக்க வேண்டும். சமுதாயத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை உணர்ந்து மக்களின் புதிய எதிர்பார்ப்புகளை கவனத்திற்கொண்டு அதிகாரிகளை பொறுப்புணர்ச்சியுடன் உழைக்க வேண்டும் என்பதே ஜனாதிபதிவிடுத்த அறைகூவலாகும். மற்றும் அரச வளங்கள் வீண் விரயம் செய்வதையும் சீரற்றவாறான முகாமைத்துவம் செய்வதையும் தடுத்தாள வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். உண்மையில் வீண் விரயம் மற்றும் ஊழல்கள் தடுத்து நிறுத்தமுடியாத வகையில் அதிவேகமாக இடம்பெற்று வரும் சூழ்நிலைதான் இன்று காணப்படுகிறது. உதாரணமாக அண்மையில் நிர்மாணிக்கப்பட்டதாகிய தென்பகுதி அதிவேக நெடுஞ்சாலை தொடர்பாக குறுஞ்செய்தி (கு.M.கு) மூலம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் பிரகாரம் 53.5% மானோர் அந்த நெடுஞ்சாலையை பணவிரயம் நிறைந்ததும் உதவற்றதுமெனவும் 12.3% மானோர் அது இன்று அவசியமற்றது எனவும் அதனை பிறிதொரு கட்டத்தில் நிர்மாணித்திருக்கலாம் எனவும் தமது கருத்தை வெளிப்படுத்தியதாக பெறுபேறுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அதாவது 2/3 தொகையான மக்களுக்கு அது ஏற்புடையதல்ல என்பது தெளிவு.ஏன் அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டதாகிய மாகம்புர மகிந்த ராஜபக்ஷ துறைமுகம் மிகின் எயர் விமான சேவை, வீரவில சர்வதேச விமான நிலையம் அருகாமையில் கிரிக்கெட் விளையாட்டு ஆடுகளம் போன்ற வீண் விரய செயற்பாடுகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இன்றைய ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ முன்பு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினராயிருந்த போது பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்றக் குழுவின் இOக உ தலைவராகச் செயற்பட்டவர். அப்போது அவர் 40 க்கு மேற்பட்ட கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் கீழ் இடம் பெற்று வந்த வீண் விரயங்களையும் ஊழல்களையும் ஆவணப்படுத்திச் சமர்ப்பித்த அறிக்கை புறந்தள்ளப்பட்டது என்பதை வாசகர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.

அண்மையில் விஜேதாச ராஜபக்ஷ இலங்கை சட்டத் தரணிகள் சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து 02.04.2012 ஆம் திகதி இடம்பெற்ற பதவியேற்பு வைபவத்தின் போது அவர் தெரிவித்த சில கவலைகள் பெரிதும் கவனத்திற்குரியதாகும். நீண்ட காலமாக பாராளுமன்றம் மீது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் மக்கள் இழந்துள்ளனர். அதிகளவில் வெளிப்படுத்தப்பட்டு வரும் அபிப்பிராயம் யாதெனில் அங்கே ஊழல் திறமையின்மை தள்ளாமை போன்ற பிரதிகூல அம்சங்கள் மலிந்திருப்பதோடு மக்களின் அபிலாசைகளைப் புறந்தள்ளி உயர்மட்ட ஆதிக்க நிலையிலுள்ளவர்களின் நலன்களே காப்பாற்றப்படுகின்றன என்று நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் சிறிஸ்கந்தராஜா, சட்டமா அதிபர் ஈவா வனசுந்தர இன்னும் பலர் முன்னிலையில் விஜேதாச ராஜபக்ஷ தனது உள்ளக் கிடக்கையைப் பகிர்ந்துள்ளார். அவர் அத்தோடு நின்றுவிடாமல் நீதித்துறையானது இன்றுள்ள நிலையையும் சித்திரித்துள்ளார். ஒட்டுமொத்தமாக அனைத்து நாட்டு மக்களும் பல்வேறு காரணங்களின் நிமித்தம் நீதி நிர்வாகத்தின் மீது ஜீரணிக்க முடியாதளவுக்கு நம்பிக்கையிழந்துள்ளனர். நீதிபதிகள், சட்டத்தரணிகள், நிறைவேற்று அதிகாரப் பொறுப்பாளர்கள் மற்றும் சட்டத்தை அமுல் நடத்தும் அதிகாரிகள் ஆகிய பங்குதாரர்கள் யாவரும் தத்தம் வேறுபாடுகளை மறந்து பற்றுறுதியுடன் உழைத்தால் ஒழிய எந்தவொரு நாட்டில் என்றாலும் சரி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி சீர் சிறப்பான ஏற்புடையதான நீதி நிர்வாகத்தை காணமுடியாது என்பது மிகப்பெரிய உண்மையாகுமா? என்று அவர் கூறிவைத்துள்ளதை அரசாங்கம் கவனத்தில் கொள்ளுமா ?

மீண்டும் ஜெனீவா தீர்மானத்திற்கு வருவோமாயின் இன்றைய நிலையில் இலங்கை அரசாங்கம் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் இந்தியா மீது வெஞ்சினம் கொண்டு காய்கள் நகர்த்தி வருவதைக் காணலாம். இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டதாகிய கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஃஃகீஇ முன்வைத்துள்ள பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதே குறித்த தீர்மானத்தின் பிரதான உள்ளடக்கம் ஆகும். அதற்கு எமக்கு யாரும் அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை என்கிறார் ஜனாதிபதி ராஜபக்ஷ. நடைமுறைப்படுத்த வேண்டு மென்றில்லை ஆனால் நடைமுறைப்படுத்தாமல் இருக்கப்போவதுமில்லை என்கிறார் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ. அடுத்து ஆணைக்குழுவின் அநேகமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சி எடுத்துள்ளது. ஏனைய பரிந்துரைகளும் காலம் தாழ்த்தாது நடைமுறைப்படுத்தப்படும் என்கிறார் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சிரேஷ்ட அமைச்சர் டியூ.குணசேகர. ஜெனீவா தீர்மானத்தின் பிரகாரம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் இலங்கை மீது வர்த்தக மற்றும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று கூறப்படவில்லையாயினும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தனித்தனியாக கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் உண்டு என்று லங்கா சமசமாஜக் கட்சித்தவைர் சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண எச்சரித்துள்ளார்.

இதனிடையில் புத்தி ஜீவிகள் குழு ஒன்றின் முக்கியஸ்தர்களாகிய முன்னாள் ஐ.நா. பிரதிச் செயலாளரும் இலங்கை அரசாங்க சமாதான செயலகத்தின் முன்னாள் செயலாளர் நாயகமுமான ஜயந்த தனபால மற்றும் கொழும்பு பல்லைக்கழக முன்னாள் உபவேந்தர் சாவித்திரி குணசேகர அம்மையார் ஆகியோர் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர். ராஜபக்ஷ அரசாங்கம் அதனை விரும்பவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை கூறத்தேவையில்லை.நல்லிணக்க ஆணைக்குழுவானது (ஃஃகீஇ) ராஜபக்ஷ அரசாங்கத்தாலேயே நாட்டப்பட்ட பயிர் ஆகும். எப்போதும் உள்நாட்டுத தீர்வு என்பது தான் எமது தெரிவு என்று பறை சாற்றி வந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஏன் இப்போது காலைப் பின் வைக்கிறது என்பது கூட ஆச்சரியத்திற்குரியதல்ல. பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.

Dienstag, 10. April 2012




தமிழகத்தில் கடுமையான மின்வெட்டுக்குக் காரணம் என்ன? தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மின்வெட்டுக்கே ஆற்காடு வீராசாமியின் பெயரைச் சூட்டி ஒரு அமைச்சரின் நிர்வாகத் திறமையின்மை, ஊழல் தான் மின்வெட்டுக்குக் காரணம் என்பது போல பிரச்சினையைச் சுருக்கி சித்திரித்தன ஊடகங்கள். மின்வெட்டு காரணமாக மக்களிடம் ஏற்பட்ட அதிருப்தியைப் பயன்படுத்திக் கொண்ட ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஆறே மாதத்தில் மின்பற்றாக் குறையைப் போக்குவேன் என்று தேர்தலுக்கு முன்பாகக் உறுதி அளித்தார். சென்ற ஆண்டு டிசம்பரில் எப்.ஐ.சி.சி.ஐ. என்ற இந்தியத் தரகு முதலாளிகள் சங்கத்தின் கூட்டத்தில் பேசிய தமிழக மின் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் 2012 இல் தமிழகத்தில் மின் வெட்டு இருக்காது என பிரகடனம் செய்தார். 2012 ஆம் ஆண்டோ எட்டு மணி நேர மின்வெட்டுடன் தொடங்கியிருக்கிறது. 2014 இல் தமிழகம் மின் உபரி மாநிலமாக இருக்கும் என்று இப்போது குறி சொல்லியிருக்கிறார் அமைச்சர். திட்டமிட்ட படி அனல் மின் நிலையங்கள் உற்பத்தியை தொடங்காதது, இருக்கின்ற மின் நிலையங்களில் பழுது காரணமாக உற்பத்திக் குறைந்திருப்பது மத்திய மின் தொகுப்பில் இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் கிடைக்காதது என்று தற்போதைய மின் பற்றாக்குறைக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. 2006 இல் தமிழகத்தின் மின் தேவை 8500 மெகா வாட். 2012 இல் 12,000 மெகா வாட். பெருகியிருக்கும் இந்த மின் தேவையை ஈடு செய்யும் விதத்தில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மின் உ ற்பத்தி பெருக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டுகிறது அ.தி.மு.க. கடந்த பத்து ஆண்டுகளில் அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் அரசின் சார்பில் புதிதாக மின் நிலையம் எதுவும் அமைக்கப்படவில்லை என்பதே உண்மை. 


இருப்பினும் மின்வெட்டு தீவிரமடைய அடைய மக்களின் கோபம் இந்தக் கட்சிகளை நோக்கித் திரும்பாமல் அணு உலைக்கு எதிராகப் போராடும் கூடங்குளம் இடிந்தகரை மக்களை நோக்கித் திட்டமிட்டே திருப்பப்படுகிறது. தினமலர் காங்கிரசு அமைச்சர் நாராணயசாமி, ப.சிதம்பரம், பாரதிய ஜனதாக் கட்சி, கருணாநிதி, போலி கம்யூனிஸ்டுகள் ஆகிய அனைவரும் ஒரே குரலில் இந்தப் பொய்ப் பிரசாரத்தை நடத்துகிறார்கள். குப்புறத் தள்ளிய குதிரைக் குழியும் பறித்த கதை தான். கடுமையான தொரு மின் பற்றாக்குறையில் நம்மைத் தள்ளிய குற்றவாளிகள் இவர்கள் தான். அணு மின்சாரம் தான் இதற்குத் தீர்வு என்று அடுத்த படு குழியையும் இவர்கள் நமக்குத் தயார் செய்கிறார்கள். மின் வெட்டை அகற்று! கூடங்குளத்தை திற ! என்று கோரும் சிறு தொழில் அதிபர்கள் வியாபாரிகள் விவசாயிகள் போன்ற பல்வேறு தரப்பினரும் தம்மை அறியாமல் உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கிறார்கள். மின் வெட்டுக்கு எந்த விதத்திலும் பொறுப்பு கூற முடியாத, கூடங் குளம் இடிந்தகரை மக்களை குற்றவாளிகளாக்குகிறார்கள். இப்படி ஒரு புறம் மக்களின் கோபம் குறி தவறிப்போக இன்னொரு புறம் பெப்ரவரி 16 அன்று தமிழகத்தின் பிரபல நாளேடுகளில் வெளிவந்த ஒரு விளம்பரம் மின்வெட்டு பிரச்சினையின் முக்கியமானதொரு பரிமாணத்தை நமக்குக் காட்டியது. தமிழகத்தில் மின்பற்றாக்குறையின் அளவு 30 % இந்தப் பற்றாக்குறையை அனைவரும் சமமாகப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாக இலட்சக்கணக்கான சிறு தொழில்களுக்கும் மேற்கு மற்றும் தென் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் 65% மின் வெட்டு விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் சென்னையிலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஐ.டி. நிறுவனங்கள் போன்றவற்றிற்கு மின்வெட்டு இல்லை. மேற் கூறிய நிறுவனங்கள் தமக்குத் தேவையான மின்சாரத்தை நேரடியாகத் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்தோ தேசியத் தொகுப்பில் இருந்தோ வாங்கிக் கொள்ள ஏதுவாக கம்பித் தடங்களைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அவற்றைக் காட்டிலும் தமிழக மின் வாரியம் அளிக்கும் மின்சாரத்தின் விலை குறைவு என்பதால் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த மின் சாரத்தை ஒட்ட உறிஞ்சுகிறார்கள். 

மின்சாரம் என்பது தமிழக மக்களின் பொதுச் சொத்து என்பதை உணர்ந்து தாங்கள் அனுபவித்து வரும் இச் சலுகையை கார்ப்பரேட் நிறுவனங்கள் தானாக முன் வந்து விட்டுக் கொடுக்க வேண்டும் என்று தமிழகத்தின் ஜவுளி, எஞ்சினியரிங் ஆலைகள், பவுண்டரிகள் மற்றும் சிறு தொழில் முனைவோரின் சங்கங்கள் அந்த விளம்பரத்தில் கோரியிருந்தனர். இதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் செவி சாய்க்க வில்லை. அரசாங்கமும் இந்த அநீதிக்கு பதிலளிக்க வில்லை. எனினும் இந்த விளம்பரம், தமிழக மின் வெட்டின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தையும் அதில் பளிச் சென்று தெரியும் மறுகாலனியாக்க கொள்கையையும் அம்பலப்படுத்துகிறது. நொக்கியா, ஹூண்டாய், போர்ட, ரெனால்ட், நிஸ்ஸான்,டைம்லர், அப்போலோ டையர்ஸ், செயின்ட் கோபெய்ன், நோக்கியா, சீமன்ஸ், மோசர் பேர் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் வாசல் முதல் கழிவறை வரை குளிரூட்டப்பட்ட ஆடம்பர மால்கள், ஐ.டி. நிறுவனங்களுக்கான உள் நாட்டுத் தொழில்கள் காவு கொடுக்கப்படுவதை எடுத்துக் காட்டுகிறது. இனி தமிழகத்தின் மின் உற்பத்தி, விநியோகம் தொடர்பான சில அடிப்படையான புள்ளி விபரங்களைப் பார்ப்போம். 201011 õம் ஆண்டில் தமிழகம் பயன்படுத்திய மொத்த மின்சாரம் 7499 கோடி யூனிட்டுகள். இதில் மாநில அரசுக்கு சொந்த மான மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் 2578.40 கோடி யூனிட்டுகள். மீதமுள்ள 4920.60 கோடி யூனிட்டுகளை மத்திய மின் தொகுப்பிலிருந்தும் தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்தும் தமிழக அரச வங்கியிருக்கிறது. மொத்த மின்சாரத்தில் 18.5% கம்பித் தட இழப்பு மற்றும் திருட்டுக்குப் போய் விடுகிறது. இதன் மூலம் ஆண்டு தோறும் வாரியத்துக்கு ஏற்படும் இழப்பு மட்டும் ரூ.2000 கோடி. மாநில அரசு உற்பத்தி செய்யும் மின் சாரத்தின் விலை குறைந்த பட்சம் யூனிட்டுக்கு 0.21 காசுகள் (நீர் மின் சக்தி). அதிக பட்சம் யூனிட்டு ரூ. 2.14 காசுகள் (அனல் மின் சக்தி). தமிழகத்திலுள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து தமிழக அரசு விலைக்கு வாங்கும் மின்சாரத்தின் விலை குறைந்த பட்சம் யூனிட்டுக்கு ரூ. 3.96 அதிக பட்சம் ரூ. 17.00. 201112 கணக்கீட்டின் படி மின்வாரியம் உற்பத்தி செய்கின்ற மற்றும் வாங்குகின்ற மொத்த மின்சாரத்தின் சாரசரி அடக்கவில்லை. யூனிட் ஒன்றுக்கு ரூ. 5.31 விற்பனை செய்கின்ற மின்சாரத்தின் சாராசரி விலை யூனிட் ஒன்றுக்கு 3.81. இந்த வகையில் தற்போது யூனிட் ஒன்றுக்கு ஏற்படும் இழப்பு ரூ. 1.50. இதனை ஈடு செய்வதற்குத் தான் மின் கட்டண உயர்வு என்று ஜெயா அரசு கூறுகிறது. தமிழகத்தின் மின்சாரம் வீடுகள் 27%, விவசாயம் 20.93 % , வணிக நிறுவனங்கள் 10.43 %, தொழிற்சாலைகள் 34.92% என்றவாறு நுகரப்படுகிறது. வீடுகளுக்கு ரூ. 1.85 முதல் ரூ. 2.90 வரை, வணிக நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ. 5.05 முதல் ரூ. 6.00 வரை தொழில் துறைக்கு ரூ.3.30 முதல் ரூ.4.05 வரை என்ற விகிதத்தில் கட்டணம் விதிக்கப்படுகிறது. இதில் வீடுகளுக்கான மின் கட்டணத்தை யூனிட்டுக்கு குறைந்த பட்சம் ரூ. 2.00 இல் தொடங்கி அதிக பட்சம் ரூ. 5.75 என்று உயர்த்தவிருப்பதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். மேற் கூறிய விபரங்களில் இருந்து பெறப்படும் உண்மை என்ன? மாநில அரசானது, மின் உற்பத்தி நிலையங்களைத் தானே நிறுவாமல், தனியார் முதலாளிகளிடம் இருந்து மின்சாரத்தை வாங்குவதால் தான் மின்சாரத்தின் விலை பன்மடங்கு அதிகரிக்கிறது. தமிழக மின்வாரியத்தின் 9% மின் சாரத் தேவையை நிறைவு செய்து விட்டு வாரியத்தின் வருவாயின் 35 சதவீதத்தை தனியார் முதலாளிகள் விழுங்கி விடுகின்றனர். (இந்தியா டுடே பெப்ரவரி 29,2012)மின் கட்டண உயர்வுக்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் தனியார் முதலாளிகளிடம் இருந்து மின்சாரம் வாங்குவது ஏன்? என்று மக்கள் கேட்டதற்கு அவ்வாறு வாங்கவில்லை என்றால் 18 மணி நேர மின் வெட்டை அமுல்படுத்த வேண்டியிருக்கும் என்று பதிலளித்திருக்கிறார் தமிழக மின்வாரியத்தின் நிதிப் பிரிவு இயக்குநர் ராஜகோபால் (தினமலர், ஜன30, 2012) தமிழக மின்வாரியத்தின் தற்போதைய கடன் 56,000 கோடி ரூபா என்றும் இவர் தெரிவித்திருக்கிறார். 

இந்த 56,000 கோடி கடன் வந்தது எப்படி? விவசாயத்துக்கான இலவச மின் சாரம் தான் இதற்குக் காரணம் என்று பலரும் பதிலளிக்கக் கூடும். அது உண்மை தானா என்பதை விபரங்களிலிருந்து பின்னர் பார்ப்போம். விவசாயத்துக்கு ஆற்றுத் தண்ணீரை விவசாயிகளுக்கு இலவசமாகத் தரக் கூடாது என்று கூறுவதும், இலவச மின்சாரம் கூடாது என்று கூறுவதும் ஒன்றே. நீர்ப்பாசனம் என்பது விவசாயத்துக்கான அடிப்படைக் கட்டுமான வசதியாகும். இதைச் செய்து தருவது அரசின் கடமை. கால்வாய் அல்லது ஏரிப்பாசன வசதிகளை அரச செய்து தரத் தவறியதால் தனது சொந்தச் செலவில் கிணறு , பம்பு செட் போட்டுக் கொள்ளும் விவசாயிக்கு மின்சாரத்தை வழங்குவது அரசின் கடமை. அது இலவசமல்ல, சலுகையும் அல்ல. ஆறு வழிச்சாலைகள், சலுகை கட்டணத்தில் சரக்கு ரயில்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சாரம் தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் குறைந்த வட்டியில் வங்கிக் கடன்கள், பிட்டர் டர்னர் முதல் பொறியியல் , மேலாண்மைத் துறைகள் வரையிலான அனைத்திலும் தகுதியான நபர்களை உருவாக்கி முதலாளிகளுக்கு வழங்கும் கல்லூரிகள், ஏற்றுமதி மானியங்கள், இறக்குமதி வரிச்சலுகைகள் என மக்களின் வரிப் பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரிக் கொட்டுகின்ற அரசு, இவற்றை எல்லாம் முதலாளிகளுக்கான இலவசம் என்று அழைப்பதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.யூனிட் 17 ரூபா வரை விலை கொடுத்து வெளிச்சத்தை வாங்கும் மின்சாரத்தை ரூ. 3.30 விலையில் கார்ப்பரேட், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் தமிழக அரசு, இதனை மானியம் என்று கூறுவதில்லை. அதனால் ஏற்படும் இழப்பையும் கணக்கிட்டுக் கூறுவதில்லை. இதை. தான் மின் வெட்டுக்காக சிறு தொழில் அதிபர்கள் கொடுத்துள்ள விளம்பரம் அம்பலப்படுத்துகிறது. 

அதேபோல கம்பித் தட இழப்பு என்று கூறப்படும் சுமார் 18.5 சதவீதத்தில் பெரும் பகுதி ஆலை முதலாளிகள் செய்யும் மின்சாரத் திருட்டாகும். துணை மின் நிலையங்களில் இருந்தே நேரடியாகவே மின்சாரம் திருடப்பட்டாலும் அந்த மின்சாரமும் இழப்பு என்று காந்திக் கணக்கில் சேர்க்கப்பட்டு விடுகிறது. இவை ஒரு புறம் இருக்க தகவல் தொழில் நுட்பத்தின் துணையுடன் இயங்கும் தொழில்களுக்கான மின் கட்டணத்தை யூனிட்டுக்கு 5 ரூபாவில் இருந்து ரூ.3.50 ஆக குறைக்க வேண்டும் என்று மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறது தமிழ் நாடு மின் வாரியம். பன்னாட்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மின்சாரத்தின் விலை என்ன என்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இடம்பெற்றுள்ள யாருமறியாத இரகசியம். இவை கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் பற்றிய விபரங்கள்.இனி வாங்கப்படும் மின்சாரத்துக்கு வருவோம். மின் வாரியம் அளிக்கும் விபரங்களின் படியே அரசாங்க மின்சாரத்தின் விலையை விட தனியார் மின்சாரத்தின் கொள்முதல் விலை பன் மடங்கு அதிகமாக இருப்பதுடன் மின் வாரியத்தின் நட்டத்துக்குக் காரணம். இன்டிபென்டென்ட் பவர் புரொடியூசர்ஸ் (சுயேச்சையான மின் உ ற்பத்தியாளர்கள்) என்று அழைக்கப்படும் தனியார் முதலாளிகளிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து கொண்டும்,மெர்சென்ட் பவர் கார்ப்பரேசன் (வணிக மின் உற்பத்திக் கழகங்கள்) என்று அழைக்கப்படுவோரிடம் சந்தை விலையிலும் மின்சாரத்தைக் கொள்முதல் செய்கிறது அரசு. மின்சாரத்தின் வெளிச் சந்தை விலை சென்ற ஆண்டில் மட்டும் குறைந்த பட்சம் யூனிட் ரூ. 1.10 இல் தொடங்கி ரூ.12.00 வரை ஏறி இறங்கியுள்ளது. இதில் எப்போதுமே குறைந்த பட்ச விலையைக் கோருவது அரச மின் நிலையங்களாகவும் அதிக பட்ச விலையைக் கோருவது தனியார் முதலாளிகளுமாகவே இருக்கின்றனர். 



இன்று மின்வெட்டை சமாளிப்பதற்காக யூனிட் ரூ. 4.50 விலையில் குஜராத்தில் இருந்து 500 மெகா வாட் மின்சாரத்தை தமிழக அரசு வாங்கி வருகிறது. இதில் 235 மெகா வாட் மட்டுமே வந்து சேர்வதகவும் 265 மெகா வாட் மின் தட இழப்பில் போய் விடுவதாகவும் கூறுகிறார் அமைச்சர் நத்தம் விசுவநாதன். இதனால் வாங்குகின்ற மின்சாரத்தின் உண்மையான விலை யூனிட்டுக்கு 10 ரூபா ஆகிவிடுகிறது. இதே மின்சாரத்தை தமிழகத்தின் தனியார் மின் உ ற்பத்தியாளர்களிடம் இருந்து அரசு வாங்க முடியும். தமிழகத்தின் காற்றாலை மின் உற்பத்தித் திறன் மட்டும் 6007 மெகா வாட். தனியார் அனல் மின் நிலைய உற்பத்தித் திறன் 1180 மெகா வாட் சென்ற ஆண்டு யூனிட் 5 ரூபா முதல் 15 ரூபா வரை விலை கொடுத்து 1500 மெகா வாட் மின்சாரத்தை தனியாரிடம் வாங்கினோம். 10,000 கோடி ரூபா அவர்களுக்கு பாக்கி வைத்திருப்பதால் இந்த ஆண்டு எதுவும் செய்வதற்கு இல்லை என்று கூறுகிறார் ஒரு மின்வாரிய அதிகாரி. (டைம்ஸ் ஆப் இந்தியா பெப்ரவரி 23, 2012). இது நாள் வரை யூனிட் 5 ரூபாவுக்கு தங்களிடம் மின்சாரத்தை வாங்கி வந்த மின்வாரியம், இப்போது ரூ.3.50 கேட்பதாகவும் இதன் காரணமாக 800 மெகா வாட் அனல் மின் உற்பத்தியை முடக்க வேண்டியிருக்கும் என்றும் சென்ற ஆண்டு மே மாதம் தமிழக அரசிடம் தெரிவித்திருக்கிறது தனியார் மின் உற்பத்தியாளர் சங்கம். (டைம்ஸ் ஆப் இந்தியா, மே 30,2012). மின்சாரத்தின் விலையை கூட்டி விற்பதன் மூலம் மின்வாரியத்தை நட்டத்தில் தள்ளுகின்ற தமிழ் நாட்டிலுள்ள 5 தனியார் அனல் மின் நிலையங்களை உடனே அரசுடமை ஆக்கும் என்று தீர்மானமே இயற்றி தி.மு.க. அரசுக்கு அனுப்பி இருக்கிறது தமிழ் நாடு மின்வாரியப் பொறியாளர் சங்கம் (தி இந்து, 19.5.2008).தனியார் மின் நிலையங்களை அரசுடமை ஆக்குவது இருக்கட்டும் முதலில் கூரை ஏறிக் கோழி பிடித்தார்களா என்று பார்ப்போம். 2005 2010 கால கட்டத்தில் மின் தேவை 3977 மெகா வாட் அதிகரித்தது என்றும், ஆனால் வெறும் 290 மெகா வாட் அளவிற்கு மட்டுமே புதிதாக உற்பத்தி செய்யப்பட்டதென்றும் 200910 க்கான கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை கூறுகிறது. இது ஒன்றைத் தவிர 20012010 கால கட்டத்தில் (அதாவது அ.தி.மு.க., தி.மு.க. இரு ஆட்சிகளிலும் ) புதிதாக ஒரு மெகா வாட் கூட உற்பத்தித் திறன் கூட அதிகரிக்கப்பட வில்லை. 

இந்தப் பத்தாண்டுகளில் ஜெயாவும் கருணாநிதியும் போட்டி போட்டுக் கொண்டு தமிழகத்தில் கொண்டு வந்து இறங்கியிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், சென்னையிலும் மற்ற பெருநகரங்களிலும் பெருகியிருக்கும் ஆடம்பரமால்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், நடுத்தர வர்க்கத்தினரிடையே பெருகியிருக்கும் விதவிதமான மின் உபகரணங்கள், ஏ.சி. மிசின்கள் ஆகிய இவற்றுக்கான மின்சாரத்தை யார் கொடுப்பது? இதற்காகவேனும் மாநில அரசு தனது சொந்த அனல் மின் நிலையங்களைத் தொடங்க வேண்டும் என்று அ.தி.மு.க., தி.மு.க. அரசுகளுக்குப் புரியாததற்குக் காரணம் அறியாமையா, நிர்வாகத் திறமையின்மையா? இரண்டும் அல்ல.புதிதாக அரசுப் பள்ளிகளோ கல்லூரிகளோ திறக்காமல் மெட்ரிக் பள்ளிகள், சுய நிதிக் கல்லூரிகளின் கொள்ளைக்கு கல்வியைத் திறந்து விட்டிருப்பதற்கு எது காரணமோ அது தான் அரசு தனது சொந்த முதலீட்டில் மின் நிலையங்களைத் தொடங்காததற்கும் காரணம். மருத்துவம், கல்வி ஆகியவற்றைப்போலவே மின்சாரமும் ஒரு விற்பனைச் சரக்கு. பொதுநல நோக்கிலோ அல்லது சமூக நோக்கிலோ அரசாங்கம் மக்களுக்கு மின்சாரத்தை குறைந்த விலையில் வழங்குவது கூடாது. அதன் விலை சர்வதேச சந்தை விலையோடு ஒத்திருக்க வேண்டும். அப்போது தான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய மின் துறையில் முதலீடு செய்ய இயலும் என்ற உலக வங்கியின் ஆணைப்படி 2003 இல் பாரதிய ஜனதா அரசு புதிய மின் சட்டத்தை இயற்றியது. அம்பேத்காரால் முன்மொழியப்பட்ட 1948 மின்சாரச் சட்டம், மின்சாரம் என்பதை விவசாயம், தொழில் மற்றும் வீட்டு உபயோகங்களுக்கான அத்தியாவசியத் தேவையாகவும், இலாப நோக்கம் இன்றி குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவையாகவும் வரையறுத்தது. இதன் காரணமாகத் தான் பல மாநிலங்களின் குக்கிராமங்கள் வரை மின் கம்பிகள் சென்றன. 2003 சட்டமோ மின்சாரத்தை இலாபமீட்டும் சரக்காகவும், மின் விநியோகத்தை வணிக நடவடிக்கையாகவும் வரையறுத்தது. மாநில மின்வாரியங்கள் மின் உற்பத்தி, மின் கடத்துதல், மின் விநியோகாம் என்று மூன்று நிறுவனங்களாக உடைக்கப்பட்டன. மின் உ ற்பத்தி தனியார் மயமாக்கப்பட்டது. இன்று அனைத்திந்திய அளவில் தனியார் மின் நிலையங்களின் உற்பத்தி 48,000 மெகா வாட். நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் இது 23 % ஆகும். அடுத்த சில ஆண்டுகளில் தனியார் உற்பத்தி மேலும் 30,000 மெகா வாட் அதிகரிக்க இருக்கிறது. அணு மின் நிலையங்கள் அமைப்பதற்கு டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகளை அனுமதிக்க இருக்கிறது மன்மோகன் அரசு. தமிழ் நாட்டில் மட்டும் 18,140 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட 10 வணிக மின் உற்பத்திக்கழகங்களுக்கு (அனல் மின்சாரம்) தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. 

நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் கார்ப்பரேட் முதலாளிகளின் பங்கு மென் மேலும் அதிகரிப்பதையே இவை காட்டுகின்றன. இது அதிகரிக்க அதிகரிக்க மின்சாரத்தின் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரம் அரசின் கையில் இருந்து அவர்கள் கைக்கு முழுவதுமாக மாறி விடும். மேட்டூர் நீர் மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு 20 காசு என்று தமிழக மின்வாரியம் கூறினாலும், கூடங்குளம் அணு மின்சாரம் அஞ்சே காசுகள் என்று அப்துல் கலாம் கூவினாலும் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு நாம் செலுத்த வேண்டிய கட்டணம் எவ்வளவு என்பதைத் தீர்மானிப்பவர்கள் கார்ப்பரேட் முதலாளிகளாகத் தான் இருப்பார்கள். மருத்துவம், கல்வி முதலான துறைகளில் மக்களின் இரத்தத்தைப் பிழிந்து காசாக்கத் தெரிந்த முதலாளிகள், கரெண்டு பில்லுக்கான காசை நம் எலும்பைப் பிழிந்தேனும் எடுத்து விடுவார்கள்.மின்சாரம் தனியார் மயம் என்பது உழைக்கும் வர்க்கத்தின் மீது உள்நாட்டு சிறு தொழில்கள் மற்றும் விவசாயத்தின் மீதும் நிரந்தரமான மின்வெட்டை திணித்து விடும். இன்றைய மின்வெட்டுக்கு முக்கிய காரணம். மின்சாரம் வாங்குவதற்கு தமிழக மின்வாரியத்திடம் பணமில்லை என்பதே. மின்சாரப் பற்றாக்குறை என்பது இரண்டாவது காரணம் தான். மின்சாரத்தின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் நாளை பன்னாட்டு முதலாளிகள், தரகு முதலாளிகளின் கைகளுக்கு முற்றிலுமாக மாறிவிடும் போது அவர்கள் சொல்லும் சர்வதேச சந்தை விலைக்கு மின்சாரத்தை வாங்க நம்மிடம் பணம் இருக்காது. எனவே மின் வெட்டு நம்மீது திணிக்கப்படும் அந்த மின்வெட்டில் இருந்து நம்மைக் காப்பாற்ற எந்த அணு சக்தியாலும் முடியாது. அதற்கு மக்கள் சக்தி தேவைப்படும். இன்று கூடங்குளத்தைத் கூடாது என்று நிறுத்தி வருகிறதே , அதே மக்கள் சக்தி தான்!

Montag, 26. März 2012




கடந்த வியாழனன்று ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை அமுல்படுத்துமாறு கோரும் முன்மொழிவுக்கான வாக்களிப்பு மேற்கொள்ளப்பட்ட அதேவேளையில் இலங்கைத் தலைநகர் பூராகவும் பௌத்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படவேண்டுமென இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் முன்மொழிவானது அந்நாட்டு அரசாங்கத்தை தூண்டுகின்றது. அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் பொறுப்பளிக்கப்படுவதானது அந்நாட்டின் மீளிணக்கப்பாட்டை மிகப்பயனுள்ள வகையில் நடத்திச் செல்ல உறுதுணையாக இருக்கும் என மனிதஉரிமைகள் பேரவைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜெனீவாவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.எதிர்பார்த்தது போன்று இலங்கையின் தலைவர்கள் இம்முன்மொழிவை நிராகரித்துள்ளனர். இம் முன்மொழிவானது நாட்டுக்கு தீங்கிழைப்பதாகவும் தேவையற்ற ஒன்றெனவும் காலத்திற்கு உகந்ததல்ல எனவும் ஜெனீவாவிலுள்ள இலங்கை பிரதிநிதிகளின் தலைவரான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்õர். எமக்கு மேலும் கால அவகாசத்தையும் இடைவெளியையும் வழங்கியிருக்கக்கூடாதா? என அவர் வினவியுள்ளார்.ஆனால் இலங்கையில் மூன்று பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டு இரு ஆண்டுகளும் 10 மாதங்களும் ஆகிய நிலையில் தற்போது இம் முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.அத்துடன் இலங்கையில் வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கான உரிமைகளை அந்நாட்டு அரசாங்கம் வழங்குவதற்கான காலம் நெருங்கிவிட்டது என ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் தீர்மானித்தனர்.இலங்கை இராணுவத்துக்கும் தமிழ்ப் புலிகள் அமைப்புக்கும் இடையில் தொடரப்பட்ட குருதி தோய்ந்த யுத்தமானது இலங்கையின் வடக்குப் பகுதியில் 2009 இல் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்ட போது பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.தற்போது இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான முன்மொழிவுக்கு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் உள்ள 47 உறுப்பு நாடுகளில் 24 நாடுகள் ஆதரவாகவும் 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்ததுடன் எட்டு நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது நடுநிலை வகித்துள்ளன.அதிகரித்த அழுத்தங்கள் மற்றும் பலவிதமான நெருக்கடிகள் வழங்கப்பட்ட போதிலும் 15 நாடுகள் எமக்கு ஆதரவாக வாக்களித்தமையானது இலங்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.இதுவரை காலமும் இலங்கை அரசாங்கத்தால் கவனத்திற்கு கொள்ளப்பட்ட விடயங்களுக்கு அமைவாகவே எமது கொள்கைகள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுவதுடன் நாட்டு மக்களின் நலன்களும் கவனத்திற் கொள்ளப்படும். பிற அழுத்தங்களால் இவ்வாறான நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படாது எனவும் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.குறிப்பாக இலங்கையின் அயல்நாடும் இலங்கையின் நட்பு நாடாகவும் விளங்குகின்ற இந்தியாவானது அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஆதரவாகவே வாக்களித்துள்ளது. 2009 இல் ஸ்ரீலங்காவுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நகர்வுகளை மேற்கொண்டபோது இந்தியாவானது இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்தது என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மார்ச் 19 அன்று பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கையில் உள்ள அனைத்து இனங்களும் மதங்களும் மதிக்கப்படத் தக்கவகையில் அரசியல் தீர்வொன்றை உருவாக்கி நாட்டில் மீளிணக்கப்பாட்டை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் 2009 இல் கூட்டப்பட்ட சிறப்பு கூட்டத்தொடரின் போது தெரிவிக்கப்பட்டதாக இந்தியாவின் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.யுத்தத்தின் இறுதி மாதங்களில் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட யுத்த மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் இலங்கையை இந்தியா வலியுறுத்தி நின்றது.தமிழ் மக்கள் உட்பட இலங்கையில் வாழும் அனைத்து சமூகத்தலைவர்களுக்கு இடையில் உண்மையான நேர்மையான மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கான சில முன் நடவடிக்கைகளையே நாம் பேரவையில் முன்வைத்திருந்தோம் என இந்தியாவின் உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவானது இலங்கையின் அயல்நாடாக இருப்பதால் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவ்விரு நாடுகளுக்கும் இடையில் இறுக்கமான நட்பு பேணப்பட்டு வருகின்றது. அதாவது இவ்விரு நாடுகளுக்கும் இடையில் ஆத்மார்த்தமான கலாசார ரீதியான உறவு பேணப்பட்டு வருகிறது எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் முன்மொழியப்பட்டுள்ள இத்தீர்மானம் இலங்கை மீது ஏற்படுத்தும் தாக்கமானது ஒரு குறியீடாக இருக்கும் என இலங்கையை சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.அதாவது இலங்கை அனைத்துலக மனித உரிமை நடைமுறைகளுக்கு அமைவாக செயற்படவில்லை என்பதை பெரும்பாலான நாடுகள் வெளிப்படுத்தி நிற்பதே இதன் அடையாளமாகும் என மனித உரிமை விவகாரத்திலுள்ள முரண்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் ஆய்வு அமைப்பான சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை அமைப்பின் தலைவரான றுக்கி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கமானது கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாகச் செயற்பட்டு பேரவையின் முன்மொழிவின் மூன்றாவது பரிந்துரையில் குறிப்பிடப்பட்ட விடயத்தை நிறைவேற்றுவதில் பேரவையுடன் இணைந்து செயற்படுமா அல்லது இல்லையா என்பதிலேயே ஸ்ரீலங்காவின் அடுத்த கட்ட நகர்வு தங்கியுள்ளதாக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

2002 தொடக்கம் மே 2009 வரையான காலப்பகுதியில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின்போதுஇடம்பெற்ற உண்மைகளை கண்டறிவதற்காக அதிபர் மகிந்த ராஜபக்ஷவால் 2010 இல் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவானது பரிந்துரைகள் அடங்கிய தனது இறுதி அறிக்கையை கடந்த நவம்பரில் கையளித்திருந்தது.ஜெனீவாவில் வாக்களிப்பு இடம்பெறுவதற்கு 24 மணிநேரம் முன்பாக இலங்கையின் வடமேற்கில் உள்ள புத்தளத்தில் அதிபர் மகிந்த ராஜபக்ஷவால் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்களுக்கான கருத்தரங்கு ஒன்றில் எந்தவொரு வெளிநாட்டு தலையீட்டையும் நான் அனுமதிக்கமாட்டேன் எனத் தெரிவித்திருந்தர்.விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்த பின்னர் இது இரண்டாவது சோதனைக் களமாக உள்ளது என மார்ச் 13அன்று கொழும்பில் நடத்தப்பட்ட பொதுக்கருத்தரங்கு ஒன்றில் இலங்கையின் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் மேற்குலக நாடுகள் தமது தலையீடுகளைக் காண்பிக்கக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து வீரவன்ச ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளார்.இவர் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் முன்பு கடந்த 2010 நடுப்பகுதியில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார். அதிபரின் தலையீட்டால் இவ் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.இலங்கை மற்றும் ராஜபக்ஷ அரசாங்கம் என்பன சுயாதீன கோட்பாடுகள் மற்றும் சீனா,ரஷ்யா,இந்தியா போன்ற வல்லரசு நாடுகளின் நிலைப்பாடுகளை வெற்றி கொள்வதற்காக மேற்குலக நாடுகளால் இலக்குவைக்கப்பட்டுள்ளதை காரணங்காட்டியே இலங்கையின் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.ஐ.நா. முன்மொழிவை தமிழ் அரசியல் தலைவர்கள் ஆதரிப்பதற்கு வேறுபட்ட காரணம் உண்டு. இலங்கைத் தமிழர் பிரதேசங்களின் அதிகாரப் பகிர்வை இலங்கை அரசாங்கம் வழங்கவில்லை என்பதாலும் இதற்கான தீர்வை அனைத்துலக சமூகம் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் இவ்வாறான முன்மொழிவு அவசியமான ஒன்று என தமிழ் சிறுபான்மை மக்களை இலங்கை பாராளுமன்றில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கான தீர்வை எட்டுவதில் ஸ்ரீலங்கா அரசாங்கம் எதனையும் உருப்படியாக செய்யவில்லை. அது தனது சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே செயற்படுகின்றது.இதனால் இந்த விடயத்தில் அனைத்துலக சமூகத்தின் ஆதரவைக் கோருவதைத் தவிர வேறு தெரிவு எதனையும் கொண்டிருக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.கற்றுக்கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழுவானது இலங்கையின் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் இந்த அரசாங்கம் இவ் ஆணைக்குழுவின் இடைக்கால பரிந்துரைகளைக் கூட இன்னமும் நிறைவேற்றவில்லை.ஆகவே அனைத்துலகின் பங்களிப்பின்றி இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என நாம் ஆழமாக நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இவ்வாறான முன்மொழிவின் மூலம் மேற்குலக நாடுகள் இலங்கையில் தமது நிர்வாகத்தை நடத்த முடியும் எனக்கருதுகின்றனர். அத்துடன் எமது நாட்டில் செல்வாக்குச் செலுத்துவதை உறுதிப்படுத்தும் கருவியாகவும் இது உள்ளது என மார்ச் 19 அன்று மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய புத்தபிக்குவான வரகொட பிறேமரத்ன தெரிவித்துள்ளார்.


இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு எங்கும் கேட்கும் கேள்வி, மக்களவைக்கு இடைத்தேர்தல் வருமா, வராதா என்பதாகத்தான் இருக்கும். ஆனால், இதற்குப் பதில் சொல்வது அவ்வளவு எளிதல்ல.பல்வேறு மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடந்து முடிந்து, தேசிய முற்போக்குக் கூட்டணிக்கு சரிவு ஏற்பட்டிருக்கிறது. மாநிலக் கட்சிகள் வலுப்பெற்றிருக்கின்றன. காங்கிரஸுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தாலும், முற்றிலுமாக வீழ்ந்து விடவில்லை.அதேபோல், தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு ஓரளவு ஏற்றம் கிடைத்திருந்தாலும், அது மத்தியில் ஆட்சியமைக்கும் அளவுக்கோ, இடைத்தேர்தலைக் கொண்டுவருவதற்கோ போதுமானதல்ல.தேசியக் கட்சிகளின் சரிவில்தான் பிராந்தியக் கட்சிகள் ஆதாயமடைந்திருக்கின்றன. இவை ஒன்றையொன்று நெருங்கக்கூடும். கூட்டுச் சேர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் மறுக்க முடியாது. ஆனால், இந்த நடைமுறைகள் மிக மெதுவாகத்தான் நடக்கும். டில்லி மாநகராட்சித் தேர்தல், குஜராத், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடக்க இருக்கும் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸுக்கும் பா.ஜ.க.வுக்கும் பல நேரடி மோதல்களைப் பார்க்க முடியும். கர்நாடகம், ஆந்திரத் தேர்தல்களும் இரு கட்சிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதன் முடிவுகளைப் பொறுத்துத்தான், எந்தப் பக்கம் சாயலாம் என்பது பற்றி மாநிலக் கட்சிகள் முடிவெடுக்கும்.

உத்தரப் பிரதேசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கும் முலாயம் சிங்கும், அவரது சமாஜவாதிக் கட்சியும் மத்திய அரசைக் கவிழ்க்கும் மனநிலையில் இல்லை. அரசுக்குத் தொடர்ந்து துணை நிற்கப்போவதாக அவர்கள் வெளிப்படையாக அறிவித்துவிட்டார்கள்.தோல்வியடைந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மாயாவதியும் பகுஜன் சமாஜ் கட்சியும் மத்திய அரசை எதிர்ப்பதற்குத் துணிய வாய்ப்பில்லை. இதற்கு அறிகுறியாக உத்தரகண்டில் காங்கிரஸ் அரசமைப்பதற்கு மாயாவதி ஆதரவு அளித்திருக்கிறார்.மம்தா பானர்ஜி காங்கிரஸுக்கும் மத்திய அரசுக்கும் தொந்தரவான கூட்டாளி. காங்கிரஸுக்கும் இடதுசாரிகளுக்கும் கூட்டணி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, எப்போதும் மத்திய அரசை நெருக்கடியிலேயே வைத்திருப்பார். ஆனால், ஆட்சியைக் கவிழ்க்கும் அளவுக்குப் போகமாட்டார் என்பது மட்டும் நிச்சயம். மக்களவையில் எண்ணிக்கை விளையாட்டில் காங்கிரஸ் கட்சி இன்னமும் முன்னணியில் இருக்கிறது. கோபத்தில் தனியாக வெளியேறினால் நஷ்டம் தங்களுக்குத்தான் என்பது மம்தாவுக்கு நன்றாகவே தெரியும்.வழக்கம்போலவே, பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சி கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். ரயில்வே பட்ஜெட்டில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சலசலப்பை உருவாக்கியதுபோல கூட்டணிக் கட்சிகளே நெருக்கடி தரலாம். ஏதாவது கூட்டணி உத்திகளைக் கையாண்டு இதைச் சமாளிக்க வேண்டியதுதான்.

அரசியலில் ஒருவரை ஒருவர் குறைகூறிக் கொண்டிருப்பதில் பயனில்லை. எத்தனையோ நேர்மறையான விடயங்கள் இருக்கும்போது, எதிர்மறைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது. சமாஜவாதி கட்சியைப் பாருங்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கட்சியின் மரியாதை அதலபாதாளத்தில் கிடந்தது. பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருந்தது. இப்போது முதல்வராகியிருக்கும் அகிலேஷ் படுதோல்வியைச் சந்தித்தார். அவரது மனைவி இடைத்தேர்தலில் தோற்றுப்போனார்.ஆனால், முலாயம் சிங்கும் அகிலேஷûம் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், கட்சியில் சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.மாயாவதியின் ஆட்சிக்கு எதிராக மக்களிடம் இருந்த மனநிலையைப் பயன்படுத்திக் கொள்வதற்கு காங்கிரஸும் பா.ஜ.க.வும் தயாராகாத நிலையில், அதன் வாக்குகளைக் கவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சமாஜவாதி மேற்கொண்டிருந்தது. அதன் பலன்தான் இத்தகைய பிரமாண்டமான வெற்றி.சிறுபான்மையினர் வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் அனைத்துக் கட்சிகளுமே மும்முரமாக இருந்தன. வேடிக்கை என்னவென்றால், சிறுபான்மையினர் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும் என்று சொல்லப்படும் 135 தொகுதிகளில் 65 தொகுதிகளில் சமாஜவாதி வெற்றிபெற்றிருக்கிறது.பகுஜன் சமாஜுக்கு 30 இடங்களிலும், பா.ஜ.க 22 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என்கிற ரீதியில் கடுமையாகப் பிரசார உத்திகளைக் கையாண்ட காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 13 இடங்கள்தான் கிடைத்திருக்கின்றன.முன்பைவிட மக்கள் இப்போது தெளிவாக இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் என்னதான் ஒருவரையொருவர் குறைகூறிக் கொண்டிருந்தாலும், திறமையும், நம்பிக்கையும் இல்லாத தலைவர்கள் தேர்தலில் வெற்றிபெற முடியாது.

வெற்றிபெற வாய்ப்பிருக்கும் கட்சிக்குத்தான் மக்கள் வாக்களிக்க விரும்புகிறார்கள். மத்தியில் காங்கிரஸுக்கும் பா.ஜ.க.வுக்கும் இதில்தான் பிரச்சினை இருக்கிறது.தேசிய அரசியலில் ஓர் அற்புதமான விடயம் நடந்திருக்கிறது. 38 வயதான அகிலேஷûக்கு வாய்ப்பளித்துவிட்டு முலாயம் சிங் ஒதுங்கிக் கொண்டிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை முதல்வராவதற்கு இது சரியான வயதுதான்.இதன் மூலம் குறைந்தது இன்னும் இருபது ஆண்டுகளுக்கு அவர் தீவிரமான அரசியலில் ஈடுபட முடியும். ஜம்மு காஷ்மீரிலும் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி போன்ற இளையோர்களின் ஆதிக்கமே இருக்கிறது. பாதல் நினைத்தால் பஞ்சாபிலும் இதுபோன்ற மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.அரசியலும் பிற துறைகளைப் போன்றதுதான். ஒரு குறிப்பிட்ட உச்ச நிலையை அடைந்துவிட்டால், சரியான நேரத்தில் ஓய்வு பெற்றுவிட வேண்டும். ஆனால், நடப்பில் பெரும்பாலானவர்களின் ஓய்வு மகிழ்ச்சியாக இருப்பதில்லை. எந்த நேரத்தில் எப்படி விலக வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியாததுதான் காரணம். இதுபற்றி நடத்திய ஆய்வில், இளமைக்காலத்தில் உலகப் புகழ்பெற்று வாழ்ந்த பலரது ஓய்வு பெறும் தருணங்களும், கடைசிக்கால வாழ்க்கையும் மிக மோசமாக இருந்ததாகத் தெரிய வந்திருக்கிறது.காங்கிரஸிலும் பா.ஜ.க.விலும் இந்த நெருக்கடி நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. மூத்த தலைவர்கள் யாருக்கும் அவமரியாதை நேர்ந்துவிடவில்லை என்றாலும், தலைமைப் பொறுப்புக்கு அடுத்த தலைமைமுறையில் இருந்து சரியான நபரைத் தேர்ந்தெடுக்காவிட்டால், பிராந்தியக் கட்சிகளின் வளர்ச்சிக்கு வழிஏற்படுத்துவதாகத்தான் அர்த்தமாகும்.

நாட்டில் மாஃபியாக்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தங்களது ஆள்பலத்தாலும், பணபலத்தாலும் மக்களாட்சியை முடக்கி, அரசைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இந்தக் கும்பல்கள் முயற்சித்து வருகின்றன.ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், ஜார்க்கண்ட், கோவா எனப் பரவி, இப்போது மத்தியப் பிரதேசத்திலும் இவர்களின் ஆட்டம் தலைதூக்கியிருக்கிறது. பீகார், ஒடிசா, மகாராஷ்டிரம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும் மாஃபியா நடவடிக்கைகள் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாகக் கூறுவதென்றால், நாடு முழுவதுமே அடியாட்களைக் கொண்ட இதுபோன்ற கும்பல்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ அதிகார வர்க்கத்தில் ஊடுருவியிருக்கின்றன.மத்தியப் பிரதேசத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடியதல்ல. இதற்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுபோல சிவராஜ் செகான் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க முடியாது.காங்கிரஸின் சதி என்று கூறுவதும் நியாயமில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களின் துணை இல்லாமல், இப்படியொரு படுபாதகமான செயலைச் செய்வதற்கு யாரும் துணிய மாட்டார்கள். கொல்லப்பட்டவரின் மனைவியும் ஐ.பி.எஸ் அதிகாரி.இந்தக் கொலையால் மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. சிறு விவகாரம்தானே என்று இதைச் சரியாகக் கையாளாமல் விட்டுவிட்டால், ஆட்சியை இழக்கும் நிலைகூட பா.ஜ.க.வுக்கு ஏற்படலாம். சி.பி.ஐ. விசாரணை அவசியமானது. நியாயமானதும் கூட.அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எத்தகைய கூட்டணிகள் உருவாகலாம் என்பதற்கான ஊகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தேசியக் கட்சிகளின் பலத்தைப் பொறுத்துத்தான் கூட்டணிகள் அமையப் போகின்றன என்பது மட்டும் இப்போதைக்கு உறுதி. இந்தக் கட்சி ஆட்சியமைப்பதற்குக் கூடுதல் வாய்ப்பிருக்கிறது என்று தெரிந்துவிட்டால், பிராந்தியக் கட்சிகள் அனைத்தும் அந்தக் கட்சிக்குப் பின்னால் அணிவகுக்கும்.இரு தேசியக் கட்சிகளும் பலவீனமாவது போலத் தெரிந்தாலோ, ஆட்சியமைப்பது சந்தேகமாக இருந்தாலோ மூன்றாவது அணி உருவாவது கட்டாயமாகிவிடும். ஆனால், இப்போதைய குழப்பமான நிலைமையில், காத்திருப்பதை மட்டுமே எல்லாக் கட்சிகளும் விரும்புகின்றன.